சிங்கபெருமாள் கோவிலில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் ஆபத்து
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் பகுதியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கானோர், வாடகைக்கு தங்கி, மகேந்திரா சிட்டி, ஒரகடம், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர்.சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு, சிங்கபெருமாள் கோவில் வந்து, மற்ற பகுதிகளுக்கு செல்கின்றனர்.இங்குள்ள ஜி.எஸ்.டி., சாலையில், மெல்ரோசாபுரம் - பகத்சிங் நகர் வரை, சாலையின் இருபுறமும் லாரி, தனியார் தொழிற்சாலை பேருந்துகள், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் ஆகியவை தினமும் நிறுத்தப்பட்டன.அதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வந்தன. சிங்கபெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில், 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணியர் அவதியடைந்து வந்தனர்.இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், கடந்த ஜூலை மாதம், சிங்கபெருமாள் கோவில் எல்லைக்கு உட்பட்ட ஜி.எஸ்.டி., சாலை, அனுமந்தபுரம் சாலையின் ஓரம், அனைத்து விதமான வாகனங்களும் நிறுத்த தடை விதித்து உத்தரவிட்டது.தற்போது, இந்த உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டு இருந்த அறிவிப்பு பதாகை மாயமாகி உள்ளது.திருத்தேரி, பாரேரி, பகத்சிங் நகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் நிறுத்துவதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதோடு, சிறு சிறு விபத்துகளில் சிக்கி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.சிங்கபெருமாள் கோவிலில் நெடுஞ்சாலைகளுக்கு அருகில் கடை வைத்துள்ளோர், தங்களின் நண்பர்களின் வாகனங்களை கடை முன் சாலையில் விட அனுமதிக்கின்றனர். அவர்கள், காலையில் வாகனங்களை விட்டுவிட்டு, வெளியூர்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். இரவு மீண்டும் வந்து வானங்களை எடுத்து செல்கின்றனர். இங்குள்ள தனியார் மருத்துவமனையில் பார்க்கிங் வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு வருவோரின் வாகனங்களும் சாலையோரம் விடப்படுகின்றன. போக்குவரத்து போலீசார் கண்காணித்து, இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.ரஞ்சித்குமார்,சிங்கபெருமாள் கோவில்.