உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தொல்லியல் சின்னங்கள் பகுதிகளில் பயணியருக்கு வசதி மேம்படுத்த ஆய்வு

தொல்லியல் சின்னங்கள் பகுதிகளில் பயணியருக்கு வசதி மேம்படுத்த ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் தொல்லியல் சின்னங்கள் பகுதிகளில், பயணியர் வசதிகளை மேம்படுத்துவது குறித்து, தொல்லியல் துறை கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஜான்விஜ் சர்மா ஆய்வு செய்தார்.மாமல்லபுரத்தில், கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, பிற குடவரைகள் ஆகிய பல்லவர் கால பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. அவற்றை தொல்லியல் துறை பராமரித்து பாதுகாக்கிறது.உள்நாடு, சர்வதேச பயணியர், சிற்பங்கள் காண்கின்றனர். சுற்றுலா பயணியர் பெருகிவரும் சூழலில், சிற்ப வளாகங்களில், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த, அத்துறை முடிவெடுத்தது.தனியார் தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்டத்தின்கீழ், சுத்திகரிப்பு குடிநீர், நவீன கழிப்பறை வளாகம், இருக்கைகள், நடைபாதை, கூடுதல் மின்விளக்குகள் ஆகிய வசதிகள் ஏற்படுத்துகிறது.கடற்கரை கோவில் பகுதியில், முதலில் இவ்வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. அடுத்து, ஐந்து ரதங்கள், வெண்ணெய் உருண்டை பாறை, பிற குடவரை பகுதிகளில், இவ்வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.இதையடுத்து, அத்துறையின் கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஜான்விஜ் சர்மா, தென்மண்டல இயக்குனர் கே.என்.பாடக், சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து, மாமல்லபுரம் பராமரிப்பு அலுவலர் ஸ்ரீதர், சமூக பொறுப்பு திட்டம் செயல்படுத்தும் தனியார் நிறுவனத்தினர், திட்ட கன்சல்டன்ட் நிறுவனத்தினர் ஆகியோருடன், நேற்று சிற்ப பகுதிகளில் பார்வையிட்டார்.சிற்ப வளாகங்களில், எங்கெங்கு, எத்தகைய வசதிகள் தேவை, அவற்றை செயல்படுத்துவது குறித்து, அவர்களுடன் ஆலோசித்தனர். சர்வதேச பாரம்பரிய நினைவு சின்னமாக விளங்கும் சிற்ப பகுதிகளில், பயணியர் நடக்கவே இடமின்றி ஏற்பட்டுஉள்ள ஆக்கிரமிப்புகளை கண்டு, குழுவினர் அதிருப்தி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !