சாலையோரம் எரிக்கப்படும் குப்பை கழிவுகளால் அவதி
மதுராந்தகம்: அச்சிறுபாக்கம் அருகே திருச்சி- - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், கடமலைப்புத்துார் ஊராட்சி அமைந்துள்ளது.அங்கு, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, புறவழிச்சாலையில் பிரிந்து, ஒரத்தி வழியாக வந்தவாசி, காஞ்சிபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.அங்கு, ஊராட்சி சார்பாக குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாலை ஓரம் கடை வைத்துள்ள வியாபாரிகள், குப்பை தொட்டியில் குப்பைகளை கொட்டுவதில்லை. கடமலைப்புத்துார் புறவழிச்சாலை ஓரம் கோழி இறைச்சி கழிவுகள், குப்பை கழிவுகள் உள்ளிட்டவை கொட்டி எரிக்கப்படுகின்றன. அதனால், அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மூச்சு திணறல், சுவாசப் பிரச்னைகளால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.எனவே, குப்பைகளை முறையாக அகற்றவும், சாலையோரங்களில் குப்பையை கொட்டி எரிப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.