உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மெல்லிய அலகு கடற்காக்கைகளை முட்டுக்காடு பகுதியில் ரசிக்கலாம்

மெல்லிய அலகு கடற்காக்கைகளை முட்டுக்காடு பகுதியில் ரசிக்கலாம்

சென்னை, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், வலசை பறவைகள் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வருவது வழக்கம். அந்த வகையில், கடலோர பகுதிகளில் உணவு தேடும் சில வகை பறவைகள், தமிழக பகுதிகளுக்கு முன்கூட்டியே வந்துள்ளதாக தெரிகிறது.பழைய மாமல்லபுரம் சாலையில் கேளம்பாக்கம் துவங்கி, கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு, நெமிலிச்சேரி வரையிலான பகுதிகளில், அரிய வகை பறவைகள் தொடர்ந்து முகாமிடுகின்றன. இங்கு காணப்படும் சிறிய குட்டைகள், கைவிடப்பட்ட உப்பளங்கள், முகத்துவார பகுதிகளில் வலசை பறவைகள் முகாமிடுகின்றன. இந்த பறவைகளை பார்த்து ரசிக்க, ஆர்வலர்கள் இங்கு குவிகின்றனர்.இது குறித்து, 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:கேளம்பாக்கம் - முட்டுக்காடு - நெமிலிச்சேரி பகுதிகளில் கடலோர பறவைகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது. சீசன் துவங்கும் முன்பே இங்கு, பல்வேறு வகை பறவைகள் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக, மிக அரிதாக காணப்படும் மெல்லிய அலகு கடற்காக்கை, இங்கு முகாமிட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, 12 பறவைகள் இங்கு உள்ளன.மத்திய தரைக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் வடமேற்கு நாடுகளில், இவை தங்கி இனப்பெருக்கம் செய்யும். வடக்கு ஆப்ரிக்க மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் இவை காணப்படுகின்றன.குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டும் இவை, இந்தியாவில், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருவது வழக்கம். இவை மட்டுமல்லாது, பூநாரை, பழுப்பு தலை கடற்காக்கை, காஸ்பியன் ஆலா, மங்கோலிய பட்டாணி உப்புகொத்தி உள்ளிட்ட, 15 வகை பறவைகள் தற்போது முகாமிட்டுள்ளன.இப்பகுதிகளில் முறையான அறிவிப்பு பலகைகள் வைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை