திருப்போரூர் -- கோவளம் சிற்றுந்து இயக்க கோரிக்கை
திருப்போரூர், திருப்போரூர் ஒன்றியம், இ.சி.ஆர்., சாலையில், கோவளம், வடநெம்மேலி, திருவிடந்தை உட்பட, பல ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி மக்கள் வசதிக்காக, ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் இ.சி.ஆர்., சாலையை இணைத்து, திருப்போரூர் -- நெம்மேலி இடையே, 6 கோடி ரூபாயில், பகிங்ஹாம் கால்வாயில் மேம்பாலம் கட்டப்பட்டது.இந்த பாலத்தில், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களில் பகுதி மக்கள் பயணிக்கின்றனர். குறிப்பாக, நெம்மேலியில் அரசு கல்லுாரி இருப்பதால், மாணவர்களின் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.வளர்ச்சியடையும் முக்கிய பகுதியாக இருந்தும், இத்தடத்தில் அரசு பேருந்து வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், பொதுமக்கள், கல்லுாரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, முதற்கட்டமாக, திருப்போரூரிலிருந்து நெம்மேலி சாலை வழியாக, கோவளத்திற்கு சிற்றுந்துகள் இயக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.