சென்னை திரும்பிய வெளியூர்வாசிகள் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்
மறைமலை நகர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், தென்மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் தங்கி, ஒரகடம், மறைமலை நகர், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.இவர்கள், வார இறுதி விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடந்த 6ம் தேதி மாலை, சொந்த ஊர்களுக்கு சென்றனர். நேற்று விடுமுறை முடிந்ததை அடுத்து, கார், இருசக்கர வாகனங்கள், பேருந்துகளில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு திரும்பினர். இதன் காரணமாக, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சென்னை மார்க்கத்தில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து ஊர்ந்து சென்றன.பரனுார் சுங்கச்சாவடி அருகில், நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணிகளுக்காக, பழைய சாலை பெயர்த்து எடுக்கப்பட்டு உள்ளதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன.ஜி.எஸ்.டி., சாலையின் முக்கிய சந்திப்புகளில், போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.