ரயிலில் பெண்களிடம் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் கைது
மதுராந்தகம், மதுராந்தகத்தில் பயணியர் ரயிலில், பாலியல் தொல்லை கொடுத்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன், 29.இவர், விழுப்புரத்தில் இருந்து தினமும் தாம்பரம் வரை பயணியர் ரயிலில் சென்று, சென்னை புறநகர் பகுதியில் பிளம்பர் வேலை செய்து வருகிறார்.மதுராந்தகம் பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களும் பணி நிமித்தமாக சென்னைக்கு, அதே ரயிலில் சென்று வந்துள்ளனர். அப்பெண்களிடம் பார்த்திபன் நட்பாக பழகி வந்துள்ளார்.நாளடைவில், பார்த்திபனின் போக்கு, தவறாக இருந்தது. பெண்கள் பார்த்திபனை கண்டித்துள்ளனர். மேலும், பார்த்திபன் செல்லும் ரயில் பெட்டியில் பயணம் செய்வதை தவிர்த்து, வேறு பெட்டியில் பயணம் செய்து வந்தனர்.ஆனால், அப்பெண்கள் எந்த பெட்டியில் ஏறுகிறார்களோ, அதே பெட்டியில் பயணம் செய்வதை பார்த்திபன் வாடிக்கையாக வைத்துள்ளார். தொடர்ந்து அப்பெண்களிடம், ஆபாசமாக பேசுவது, எல்லை மீறி ஆபாசமாக செய்கை முறையில் செயல்படுவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார்.நேற்று, மதுராந்தகம் ரயில் நிலையத்தில் ஏறிய அப்பெண்களிடம், பார்த்திபன் ஆபாசமாக பேசி தவறாக நடந்துள்ளார். தொடர்ந்து, பெண்கள் மற்றும் சக பயணியர் பார்த்திபனுக்கு தர்ம அடி கொடுத்து, ரயிலில் இருந்து கீழே இறக்கி, மதுராந்தகம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார், வழக்கு பதிவு செய்து, பார்த்திபனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.