உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுவன் பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சிறுவன் பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

செங்கல்பட்டு, சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது.சென்னை பள்ளிக்கரணை காவல் சரகத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன், கடந்த 2023ம் ஆண்டு, மே 18ம் தேதி, மேடவாக்கத்திலுள்ள ராஜிவ் என்கிற ராஜாராம், 20, என்பவரின் பெட்டிக்கடைக்கு சென்றார்.அங்கு, சிறுவன் 30 ரூபாய் கொடுத்து, பிஸ்கட் தருமாறு கடைக்காரரிடம் கேட்டுள்ளான். அப்போது, சிறுவனை கடைக்குள் அழைத்து, ராஜிவ் என்கிற ராஜாராம் கடுமையான பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன், பெற்றோரிடம் நடந்ததைக் கூறினான். இதுகுறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின்படி, சேலையூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜிவ் என்கிற ராஜாராமை, போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலிதேவி ஆஜரானார்.வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், ராஜிவ் என்கிற ராஜாராமுக்கு ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால், ஒரு வருடம் சிறை தண்டனையும் வழங்கி, நீதிபதி நசீமா பானு, நேற்று தீர்ப்பளித்தார்.மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.அதன் பின், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ராஜிவ் என்கிற ராஜாராமுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !