20 மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக பயன்பாட்டிற்கு இடம் ஒதுக்கீடு
சென்னை,:சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பயணியரிடமிருந்து வரும் கட்டண வசூல் மட்டுமின்றி, மாற்று வழிகளில் வருவாயை பெருக்க, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:பயணியர் கட்டணம் மட்டுமின்றி, மாற்று வழிகளில் வருவாயை பெருக்க, மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அதன்படி, மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் சொந்தமான இடங்களில் விளம்பரங்கள் செய்வது, காலியாகவுள்ள இடங்களை வணிக பயன்பாட்டிற்கு அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி, சென்ட்ரல், எழும்பூர், வடபழனி, நந்தனம், சைதாப்பேட்டை, டி.எம்.எஸ்., ஆயிரம் விளக்கு, பரங்கிமலை உட்பட, 20 மெட்ரோ ரயில் நிலையங்களில், வணிக பயன்பாட்டிற்கு அனுமதிக்க உள்ளோம். உணவகம், பர்னிச்சர் கடைகள், துணி, நகை கடைகள் உள்ளிட்டவை அமைக்கலாம்.மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ஏற்றாற்போல், 20 சதுர மீட்டர் முதல் அதிகபட்சமாக, 1,900 சதுர மீட்டர் வரை இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.விருப்பமுள்ளோர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின், chennaimetrorail.org/business-development/retail-spaces என்ற தளத்துக்கு சென்று, தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மார்ச்சில் பயன்பாட்டிற்கு வரும்
'பல்வேறு வசதிகளுடன், 14.15 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்டு வரும் பரங்கிமலை ரயில் நிலையம், அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வரும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.'அம்ரித் பாரத்' நிலைய திட்டத்தின் கீழ், சென்னை ரயில்வே கோட்டத்தில், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, கூடுவாஞ்சேரி, சூலுார்பேட்டை, செங்கல்பட்டு, அம்பத்துார், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், சென்னை பூங்கா, சென்னை கடற்கரை, குரோம்பேட்டை, திரிசூலம் ஆகிய, 17 நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. பரங்கிமலை ரயில் நிலையத்தில், 14.15 கோடி ரூபாயில் நடந்து வரும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: பரங்கிமலை ரயில் நிலையம் வழியாக, 98 விரைவு ரயில்கள் கடந்து செல்கின்றன; 201 மின்சார ரயில்கள் நின்று செல்கின்றன. இந்த ரயில் நிலையத்துக்கு தினமும், 25,000 பேர் வந்து செல்கின்றனர். பயணியர் வசதிக்காக, இங்கு பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. மின்சார ரயில் சேவை, மாநகர பஸ், மெட்ரோ ரயில் சேவை ஆகிய வசதிகளுடன், வேளச்சேரி -- பரங்கிமலை மேம்பால ரயில் சேவையும் இணையும்போது, பன்முக போக்குவரத்துக்கான முக்கிய மையமாக, பரங்கிமலை ரயில் நிலையம் மாறும். பாதசாரிகள் எளிதாக அணுகும் வகையில், புதிதாக பாதசாரி பிளாசா ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதுபோல, ரயில் நிலையத்தின் நடைமேடை மேம்பாடு, 'சிசிடிவி' கேமரா, வாகன நிறுத்தம், எஸ்கலேட்டர்கள், லிப்ட் உள்ளிட்ட வசதிகளுடன், பணிகள் முடியும் நிலையில் உள்ளன. அடுத்த மாதம் இறுதிக்குள் மேம்படுத்தப்பட்ட இந்த ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.