மேலும் செய்திகள்
கானுலா கல்வியில் மாணவர்கள் ஆர்வம்!
20-Jul-2025
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், எப்போதும் இல்லாத வகையில் தற்போது, ஒரே சமயத்தில், 220 பாம்புத்தாரா பறவைகள் முகாமிட்டுள்ளது வனத்துறை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சென்னை வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பரவியுள்ளது. தென் சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் தடுத்து வரும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சதுப்பு நிலத்தில், இதுவரை, 202 வகை பறவைகள் வந்து செல்வது ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகள் குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டும் காணப்படும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக சில வகை பறவைகள் சீசன் இல்லாத காலத்திலும் பள்ளிக்கரணையில் முகாமிடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த வகையில் பாம்புத்தாரா பறவைகள் தற்போது அதிக எண்ணிக்கையில் முகாமிட்டுள்ளன. இது குறித்து 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பை சேர்ந்த சந்திரகுமார் கூறியதாவது: ஆங்கிலத்தில் 'டார்டர்' என குறிப்பிடப்படும் பாம்புத்தாரா பறவைகள் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படுகின்றன. தமிழகத்தில் மார்ச், ஏப்., மாதங்களில் வரும் இப்பறவைகள், இங்கு கருவேல மரங்களில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். இதன் பின் குறிப்பிட்ட சில வட மாநிலங்களில் மட்டுமே, ஜூன், ஜூலை மாதங்களில் இப்பறவைகள் இனபெருக்கம் செய்யும். வழக்கத்துக்கு மாறாக, தற்போது ஜூலை மாதத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், 220 பாம்புத்தாரா பறவைகள் இருப்பது வனத்துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பொதுவாக, உடல் முழுதையும் தண்ணீருக்குள் மறைத்து பாம்பு போன்ற கழுத்து பகுதியை மட்டும் வெளியில் நீட்டிக்கொண்டு உணவு தேடும். இதன் கழுத்துப்பகுதியில் காணப்படும் வித்தியாசமான வளைவுகள் காரணமாக இதற்கு பாம்புத்தாரா என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த, 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது ஜூலை மாதத்தில் இப்பறவைகள் இங்கு குவிந்திருப்பதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -
20-Jul-2025