திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சி ஓ.எம்.ஆர்., சாலையில், என் மண்; என் மக்கள் யாத்திரை நேற்று நடந்தது. பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஒன்றியங்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.ஓ.எம்.ஆர்., சாலையில் இந்தியன் வங்கியிலிருந்து ரவுண்டானா வரை நடைபயணமாக வந்தார். இதில், 1,000த்துக்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்றனர்.பின், பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையை முழுதுமாக மாற்றக்கூடிய தகுதி இருக்கக்கூடிய யாத்திரையாக, இன்றைக்கு என் மண்; என் மக்கள் யாத்திரை இருக்கிறது.தமிழகத்தில், எத்தனை இடத்தில் முருகப்பெருமான் இருந்தாலும், திருச்செந்துார், திருப்பரங்குன்றம், திருப்போரூரில் இருக்கும் முருகப்பெருமான் மட்டும் தனிச்சிறப்பு. காரணம், சூரபத்மனை வதம் செய்த மண்.கடந்த 2019 -- 24 வரை, தமிழகத்திற்கு என்ன நிலைமையோ, அதே நிலைமை மறுபடியும் 2024 -- 29 வரை வர வேண்டாம் என்பதற்காகத் தான், இந்த யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது.கடந்த 33 மாதங்களில், தி.மு.க., ஆட்சியில், ஒரு துறையாவது ஒழுக்கமாக இருக்கிறதா என சொல்லுங்கள். பத்திர பதிவுத்துறை உட்பட அரசு துறை எல்லாமே லஞ்சம் இல்லாமல் வேலை நடக்கிறதா?உலகப்புகழ்பெற்ற மாமல்லபுரத்தில், 1,300 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால சிற்பங்கள் இருக்கின்றன. இங்கு, 2019ல் அக்டோபர் மாதத்தில் மோடி, சீன அதிபரை அழைத்து வந்தார்.வாரத்திற்கு 50,000 பேர் வரக்கூடிய ஊர், மோடி சென்ற பின், அடுத்த வாரமே 1.50 லட்சம் பேர் வந்து சென்றனர்.கடந்த 2023ல், ஜி20 மாநாடு நடந்தபோது, அதன் மகளிர் மாநாடு மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டது. ஆனால், தி.மு.க., அரசு, மாமல்லபுரத்தில் ஒரு பஸ் ஸ்டாண்ட் கூட கட்ட முடியாமல் உள்ளது.கழிப்பறையை சுத்தமாக பராமரிக்கவில்லை. ராமர் கோவில் கட்டிய பின், 2025ல், 5 கோடி பேர் அங்கு போகப் போகிறார்கள்.இதனால் வரக்கூடிய வருமானம், 25,000 கோடி. தி.மு.க.,வினர் என்னை பார்த்து, எப்படி 25,000 கோடி வரும் என, எப்படி கணக்கு சொல்கிறீர்கள் என கேட்கின்றனர். நான், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா புள்ளி விபரத்தின்படி சொல்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.