சென்னை:அரசு திட்டங்கள் மற்றும் சாலை விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தியதுபோக, 55 ஏக்கர் பரப்பில், வேளச்சேரி ஏரி உள்ளது. 100 அடி சாலை, கக்கன் பாலம் வடிகால்கள் மற்றும் ராஜ்பவன் கால்வாய்கள், ஏரியில் இணைகின்றன.இதில், மழைநீர் செல்ல வேண்டும். மாறாக, கழிவுநீர் ஆறாக ஓடி, ஏரியில் கலக்கிறது. வடிகாலில் விடப்படும் சட்ட விரோத கழிவுநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், ஏரிக்கு செல்லும் கழிவுநீரை தடுத்து, அருகில் உள்ள கழிவுநீர் உந்து நிலையம் எடுத்துச் செல்லும் வகையில், குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக, 4.08 கோடி ரூபாயில், கடந்த ஆண்டு பணி துவங்கியது. கால்வாய் மற்றும் வடிகால்கள் முடியும் இடத்தில், ஏரியை ஒட்டி, 20 அடி ஆழம், 7 அடி விட்டத்தில் கிணறு அமைக்கப்படுகிறது.ஏரிக்கு வரும் கழிவுநீர், இந்த கிணற்றில் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிணற்றில் விழும் கழிவுநீரை, தானியங்கி மோட்டார் வைத்து இறைத்து, அருகில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்திற்கு குழாய் வழியாக எடுத்துச் செல்லப்பட உள்ளது.இதற்காக, ராஜ்பவன் கால்வாயில் இருந்து, உந்து நிலையத்திற்கு, 100 மீட்டர் நீளத்தில் குழாய் மற்றும் கிணறு அமைக்கப்பட்டது. இந்த பணி முடிந்து, கழிவுநீர் செல்கிறது.அதேபோல், 100 அடி சாலையில் இருந்து, 800 மீட்டர் துாரத்தில் குழாய் பதிக்கப்பட்டது. கிணறு அமைக்கும் பணி நடக்கிறது. மேலும், கக்கன் பாலத்தில் இருந்து, 1.5 கி.மீ., குழாய் மற்றும் கிணறு அமைக்க வேண்டி உள்ளது.ஒவ்வொரு கிணற்றிலும், தினமும், 10 லட்சம் கழிவுநீரை இறைக்கும் திறன் உடைய 10 எச்.பி., திறன் தானியங்கி மோட்டார் அமைக்கப்பட உள்ளது.இந்த பணிகளை, விரைந்து முடிக்கும் வகையில், குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதன் வாயிலாக, வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.