அரசு பள்ளியின் கூரை சிமென்ட் பூச்சு உடைந்து விழுந்து 5 மாணவர்கள் காயம்; கட்டி முடித்து 3 மாதத்தில் உடைந்ததால் அதிர்ச்சி
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டு நடுநிலைப் பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படிக்கின்றனர்.நேற்று மதியம், ஆறாம் வகுப்பைச் சேர்ந்த 14 மாணவர்கள், வகுப்பறை வெளியே வராண்டா பகுதியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர்.அப்போது திடீரென, கட்டடத்தின் கான்கிரீட் கூரை சிமென்ட் பூச்சு உடைந்து விழுந்தது.இதில் ரக் ஷித், கோகுல், கோபிகா, தேன்மொழி, வைஷாலி ஆகிய ஐந்து மாணவ - மாணவியருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது.அவர்களை மீட்ட பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள், மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.இக்கட்டடம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2024-- 25ல், 33 லட்சம் ரூபாயில், இரண்டு வகுப்பறையுடன் புதிதாக கட்டப்பட்டது. கட்டடம் பயன்பாட்டிற்கு வந்த மூன்று மாதங்களில், கூரையின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, மாணவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது:தரமற்ற முறையில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டடத்தை மறு ஆய்வு செய்த பின் தான் திறக்க வேண்டும்.தரமற்ற கட்டடத்தை கட்டிய ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.இது போல, இவர் கட்டிய கட்டடங்கள் தரமானதாக உள்ளதா என, உறுதி செய்ய வேண்டும்.குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயமாக உள்ளது.மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.