உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 5 டன் பறிமுதல் கஞ்சா தீயிலிட்டு அழிப்பு

5 டன் பறிமுதல் கஞ்சா தீயிலிட்டு அழிப்பு

மறைமலை நகர்: தமிழகம் முழுதும் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்ட, 30 கோடி ரூபாய் மதிப்பிலான, 5 டன் கஞ்சா மற்றும் போதை பொருட்கள், தீயிலிட்டு அழிக்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அடுத்த தென்மேல்பாக்கத்தில், ஜி.ஜே., மல்டிகிலேவ் என்ற, தனியார் மருத்துவக் கழிவுகள் எரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு, தமிழகம் முழுதும் போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், நீதிமன்ற உத்தரவுக்குப் பின் தீயிலிட்டு எரிக்கப்படும். அந்த வகையில், தமிழகம் முழுதும் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாரால், 904 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட, 14,864 கிலோ கஞ்சா, 50 கிலோ சாராஸ், 4.8 கிலோ கஞ்சா சாக்லேட், 5 கிலோ கெட்டமைன், 800 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 2.3 கிலோ ஹெராயின் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களை தீயிலிட்டு அழிக்கும் பணிகள், நேற்று காலை இந்த நிறுவனத்தில் துவங்கின. இதை, போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு ஐ.ஜி., செந்தில்குமாரி துவக்கி வைத்தார். நேற்று முதற்கட்டமாக மதுரை, திண்டுக்கல், துாத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கைப்பற்றப்பட்ட, 5 டன் போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு, 30 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என, போலீசார் கூறினர். போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு எஸ்.பி., மதிவாணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ