உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வெள்ள பாதிப்பால் தனித்தீவாக மாறிய 6 கிராமங்கள்...புரட்டி எடுத்த மழை!:நிவாரண முகாமில் 1471 பேர்; 10,000 ஏக்கர் பயிர் நாசம்

வெள்ள பாதிப்பால் தனித்தீவாக மாறிய 6 கிராமங்கள்...புரட்டி எடுத்த மழை!:நிவாரண முகாமில் 1471 பேர்; 10,000 ஏக்கர் பயிர் நாசம்

செங்கல்பட்டு: 'பெஞ்சல்' புயலால் பெய்த மழை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில், 41க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில், 1,471 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. ஐந்து கிராமங்களை மழைநீர் சூழ்ந்துள்ளன.செங்கல்பட்டு மாவட்டத்தில், 'பெஞ்சல்' புயல் காரணமாக, மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண, கண்காணிப்பு குழுவினருக்கு அறிவுறுத்தப்படுகிறது.வெள்ளம் பாதித்த 378 பகுதிகளில், மண்டல குழுவினர் கண்காணித்து வருகின்றனர். தாழ்வான இடங்களில் வசிக்கும் 392 குடும்பங்களைச் சேர்ந்த 1,471 பேரை, 41க்கும் மேற்பட் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம் உட்பட எட்டு தாலுகாவில், சம்பா பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்ததில், 10,000 ஏக்கர் நெற்பயிர் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் 417 ஏக்கர் நீரில் மூழ்கியது.இப்பகுதிகளை, வேளாண்மை இணை இயக்குனர் பிரேம்சாந்தி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.மாவட்டம் முழுதும் 690 மின்கம்பங்கள், 23 மின்மாற்றிகள் புயலால் உடைந்து விழுந்துள்ளது. கம்பங்கள், மின்மாற்றிகள் சீரமைக்கும் பணியில், மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.மழையில் சிக்கி, ஏழு மாடுகள், ஆறு கன்று குட்டிகள், ஆறு ஆடுகள் மற்றும் தனியார் கோழிப்பண்ணையில், 16 நாட்டுக்கோழிகள் இறந்தது. மருத்துவ முகாமில் 3,938 பேர் சிகிச்சை பெற்றனர்.நெடுஞ்சாலை மற்றும் சாலைகளில் விழுந்த 1,129 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்கும் பணியில், நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் உள்ள சாலைகளில் மரங்கள் விழுந்து, உடனே வெட்டி அகற்றப்பட்டன. கடற்கரை கோவில் வளாக அகழியில் மழைநீர் தேங்கியது.கல்பாக்கம் நகரியத்தில், மத்திய தொழிலக பாதுகாப்பு படை முகாம் அலுவலகம் அருகில் உள்ள தகவல் தொடர்பு டவர், புதுப்பட்டினம் மீனவர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விழுந்து, குடிநீர் தொட்டி இடிந்தது.கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலத்தில், அஞ்சலை என்பவர் வீட்டில், மரம் விழுந்தது. புதுச்சேரி சாலையில் ஆங்காங்கே மரங்கள் விழுந்தன. அவை உடனே அகற்றப்பட்டன. கடலில் நேற்றும் சீற்றம் காணப்பட்டது.

அச்சிறுபாக்கம்

அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு முருங்கை ஊராட்சியில், முருங்கையில் இருந்து அல்லுார் வரை செல்லும் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டது.அதேபோல, முருங்கை - கொங்கரை சாலையில் உள்ள தரைப்பாலத்தின் மீது 2 அடிக்கும் அதிகமாக தண்ணீர் செல்கிறது. முருங்கை - சிறுத்தாமூர் சாலையில், முன்னக்குளம் ஏரியின் கலங்கல் நீர் செல்வதால், சாலையை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.இதனால், முருங்கை கிராமத்தின் அனைத்து சாலைகளிலும் மழைநீர் செல்வதால், தனி தீவு போல காட்சியளிக்கிறது.

சூணாம்பேடு

சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டு, வெள்ளங்கொண்டகரம், புதுப்பேட்டை, புதுகுடி, விளாம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில். 1,000க்கும் மேற்பட்ட கிராமத்தினர் வசித்து வருகின்றனர்.ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 5 கிராமங்களிலும் தண்ணீர் சூழ்ந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனி தீவு போல காட்சியளித்தது.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வருவாய்த் துறையினர், கிராமவாசிகளை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அழைத்தனர். ஆனால், கிராம வாசிகள் மறுப்பு தெரிவித்தனர்.இதனால், ஊராட்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில், டிராக்டர் வாயிலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கினர்.

கூடுவாஞ்சேரி

நந்திவரம் - கூடுவாஞ்சேரியில் மழை காரணமாக மின்தடை ஏற்பட்டது. குறிப்பாக, நந்திவரத்தில் உள்ள அரசு மருத்துவமனை, வண்டலூர் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் மின்தடையால் பணிகள் பாதித்தன.அதேபோல, காயரம்பேடு, பெருமாட்டு நல்லூர், ஊரப்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

மதுராந்தகம்

மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்குள்ள, 16 அடி உயரமுள்ள வேடந்தாங்கல் ஏரி நிரம்பி, கலங்கள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

திருப்போரூர்

திருப்போரூர், பூண்டி, கரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் சாய்ந்துள்ளன. மின்கம்பி அறுந்து தொங்கியது.இதனால், நேற்று முன்தினம் காலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரியத்தினர் மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.சிறுதாவூர், தண்டலம், ராயமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில், வாழை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளம்பர பதாகைகள் சாய்ந்தன.கேளம்பாக்கம்- - வண்டலூர் சாலை, காரணை - பெரும்பாக்கம் சாலைகளில் 2 அடி உயரத்தில் மழைநீர் தேங்கியது. திருப்போரூர் ஒன்றியத்தில், 3,000 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர் மழை வெள்ளத்தில் மூழ்கின.

நிரம்பி வரும் ஏரிகள்

மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 528 ஏரிகளில், 103 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி வழிகிறது. ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 620 ஏரிகளில் 112 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மொத்தம் உள்ள 2,512 குளங்களில் 777 முழுமையாக நிரம்பின. நீர்நிலை பகுதிகளில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறையினர் பாதுகாகப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் சிக்கிய இருவர் மீட்பு

சூணாம்பேடு பகுதியில் இருந்து திண்டிவனம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், சூணாம்பேடு ஏரி மற்றும் புதுப்பட்டு ஏரி உபரி நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.நேற்று காலை அந்த வழியாக சென்ற 'ஈச்சர்' வாகனம் வெள்ளத்தில் சிக்கியது.பின், வெள்ளத்தை வாகனம் கடந்து சென்றது. வாகனத்தின் பின்புறம் இருந்த இருவர், கீழே இறங்கினர். அப்போது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, அருகே இருந்து முட்புதரில் சிக்கினர். அப்பகுதியினர் கயிறு கட்டி, இருவரையும் மீட்டனர்.

ரூ.1.55 கோடியில் கால்வாய் அமைத்தும் பயனில்லை செய்யூர் - வில்லிப்பாக்கம் சாலை மீண்டும் துண்டிப்பு

செய்யூர் அருகே கடுக்கலுார் கிராமத்தில், வில்லிப்பாக்கம் - செய்யூர் இடையே செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை கடுக்கலுார், வெடால், ஒத்திவிளாகம், சூரக்குப்பம், வேலுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமவாசிகளின் பிரதான சாலையாக உள்ளது. தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.ஆண்டுதோறும் பருவ மழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. பாலம் அமைத்து நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.இதை தொடர்ந்து, கடந்தாண்டு நெடுஞ்சாலைத் துறை சார்பில், 1.55 கோடியில் மழைநீர் வடிகால்வாய் மற்றும் தடுப்பு அமைக்கப்பட்டது.இரண்டு நாட்களாக 'பெஞ்சல்' புயல் காரணமாக, இப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து அப்பகுதி விவசாயி கூறியதாவது:பாலம் அமைத்து நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்,அதற்கு பதிலாக, நெடுஞ்சாலைத்துறை சார்பில் 1.55 கோடி ரூபாயில், சாலையோரத்தில் மண் அரிப்பை தடுக்க வடிகால்வாய் மற்றும் தடுப்பு அமைக்கப்பட்டது.வழக்கம்போல, நடப்பாண்டும் மழைநீர் பெருக்கெடுத்து சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. வடிகால்வாய் மற்றும் தடுப்பு அமைத்து எந்த பயனும் இல்லை. 1.55 கோடி ரூபாய் நிதி வீணடிக்கப்பட்டு உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கால்வாய்களின் நடுவே பாலம் அமைத்து, நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.

வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடரும் அவலம்

சிங்கபெருமாள் கோவில் -- பாலூர் சாலை, 10 கி.மீ., நீளம் கொண்டது. இந்த சாலை, காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலையாக உள்ளது.இச்சாலை வழியாக பாலூர், வெண்பாக்கம், ரெட்டிபாளையம், கரும்பாக்கம், குருவன்மேடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.வெண்பாக்கம் - ரெட்டிபாளையம் இடையே, தென்னேரி ஏரி உபரி நீர் மற்றும் 20க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரி நீர் செல்லும் நீஞ்சல் மடுவு கால்வாய் உள்ளது. ஒவ்வொரு ஆண்டு மழைக்காலத்தில், இந்த தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்படுவது வழக்கம்.இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக, தரைப்பாலம் முழ்கியது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, செங்கல்பட்டு, ஒரகடம் வழியாக சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலம் ஆண்டுதோறும் தண்ணீரில் மூழ்கும், அதேபோல, சாஸ்திரம்பாக்கம் -- வில்லியம்பாக்கம் சாலை தரைப்பாலமும் வெள்ளநீரில் மூழ்கி உள்ளது.இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் பல கி.மீ., சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்தாண்டு தரைப்பாலம் அகலப்படுத்தும் போது, மேம்பாலம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தோம்.தற்போது, தரைப்பாலம் அகலப்படுத்தப்பட்டும், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது: ரெட்டிப்பாளையம் -- வெண்பாக்கம் இடையே, 78 லட்சம் ரூபாயில், 9 மீட்டர் நீளம் இருந்த தரைப்பாலம், தற்போது 24 மீட்டராக அகலப்படுத்தப்பட்டு உள்ளது.இந்த பகுதியில், பூமிக்கடியில் பெரிய பாறைகள் உள்ளதால், மேம்பாலம் அமைப்பது குறித்து வரும் காலங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.புயல் காரணமாக கொண்டமங்கலம், பெருந்தண்டலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து, மின் தடை ஏற்பட்டது.மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் மின்வாரிய அலுவலகங்களுக்கு உட்பட்ட பல இடங்களில் மின் தடை ஏற்பட்டு, பகுதிவாசிகள் கடும் அவதியடைந்தனர். சீரமைப்பு பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ