| ADDED : பிப் 11, 2024 11:26 PM
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் பயணியர் செல்லவும், வெளியேறவும், தானியங்கி டிக்கெட் பரிசோதனை கருவிகள், நுழைவாயிலில் வைக்கப்பட்டு உள்ளன. இவை, அவ்வப்போது முறையாக இயங்காமல் பழுதாவதால், பயணியர் சிரமப்படுகின்றனர்.இதனால், டிக்கெட் பரிசோதிக்கும் பழைய தானியங்கி கருவிகளை மாற்ற, மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:மெட்ரோ ரயில் நிலையங்களின் சில நுழைவாயில்களில், தானியங்கி டிக்கெட் பரிசோதனை கருவிகளில் குறைபாடுகள் ஏற்படுகின்றன. இதனால், பயணியர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், இக்கருவிகளுக்கான உதிரிபாகங்கள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது.அதனால், இவை அனைத்தையும் மாற்றி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்ப தானியங்கி பரிசோதனை கருவிகளை நுழைவாயில் பகுதிகளில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள், அடுத்த மூன்று ஆண்டுகளில் முடிவடையும்.கிண்டி, அரசு எஸ்டேட், ஆயிரம் விளக்கு, கோயம்பேடு போன்ற பல நிலையங்களில், அலுவலக நேரங்களில், பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால் இந்நிலையங்களில், அடுத்த எட்டு மாதங்களில் அவற்றை நிறுவ திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.