தறிகெட்டு ஓடிய ஆம்னி பஸ் மோதி ஸ்கூட்டரில் சென்ற வாலிபர் படுகாயம்
மறைமலை நகர், தேனியில் இருந்து சென்னை நோக்கி நேற்று காலை, தனியார் ஆம்னி பேருந்து ஒன்று, ஜி.எஸ்.டி., சாலையில் வந்து கொண்டிருந்தது.பேருந்தை, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது பட்டாணி, 39, என்பவர் ஓட்டினார்.மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள போக்குவரத்து சந்திப்பு அருகில் வந்த போது, திடீரென,'பிரேக்' பழுதாகி உள்ளது.இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து, செங்கல்பட்டு மார்க்கத்தில் போக்குவரத்து சிக்னலை கடக்க நின்ற இரண்டு கார்கள் மற்றும் 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டர் மீது மோதியது.அத்துடன் நிற்காமல், ஜி.எஸ்.டி., சாலைக்கும் அணுகு சாலைக்கும் இடையே உள்ள இரும்பு தடுப்பு கம்பிகள் மீது மோதி நின்றது.இதில், ஹோண்டா டியோ ஸ்கூட்டர், பேருந்தின் அடிப்பகுதியில் சிக்கியது. அதில் பயணித்த சரத், 30, என்பவர் படுகாயம் அடைந்தார். தகவலறிந்து வந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீசார் சரத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின், 'கிரேன்' இயந்திரம் வாயிலாக ஸ்கூட்டரை மீட்டு, போக்குவரத்தை சரி செய்தனர்.இச்சம்பவம் குறித்து, பொத்தேரியில் செயல்பட்டு வரும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.