உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் எரியாததால் விபத்து அபாயம்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் எரியாததால் விபத்து அபாயம்

மறைமலைநகர்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில், இரவு நேரத்தில் மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணிக்கும் நிலை தொடர்கிறது.சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை, தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலை. மேலும் மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில் பகுதிகளை சுற்றியுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த வழியாக இருசக்கர வாகனங்கள், கார், லாரி, பேருந்து வழியாக சென்று வருகின்றனர்.இந்த சாலை நடுவே உள்ள மீடியனில், வாகன ஓட்டிகள் வசதிக்காக மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மின் விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தடுமாறி, விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.கடந்த வாரம், சிங்கபெருமாள்கோவில் மெல்ரோசாபுரம் பகுதியில் இரவில் ஏற்பட்ட விபத்தில், இரு வாலிபர்கள் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடந்த 31ம் தேதி, திருத்தேரி பகுதியில் கார் மீது டாரஸ் லாரி மோதி, மூவர் உயிரிழந்தனர். நால்வர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தொடர் விபத்துகளால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். நெடுஞ்சாலையில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் உள்ளது, விபத்துகளுக்கு முக்கிய காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பழுதான மின் விளக்குகளை உடனே மாற்றி அமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., சாலை, புறநகர் பகுதிகளில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. இங்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்க பணிகளின் போது, மின் கம்பங்களில் இருந்து மின் இணைப்பு அகற்றப்பட்டது.இதன் காரணமாக சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்விளக்கு கம்பங்கள், வெறும் காட்சிப்பொருளாக பயனற்ற நிலையில் உள்ளன.இருள் சூழ்ந்த சாலையால், அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி மருத்துவ செலவு, வாகன பழுது நீக்க செலவுகளை சந்திப்பதுடன், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதல்வர் தனிப்பிரிவுக்கும் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரும் விபத்துகள் ஏற்படும் முன், சாலையிலுள்ள மின் விளக்குகளை பழுது நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை