| ADDED : மார் 14, 2024 07:51 PM
திருப்போரூர்:திருப்போரூர் பிரணவ மலையில் உள்ள கைலாசநாதர் கோவில், சங்ககால பழமையான கோவிலாகக் கூறப்படுகிறது.அகத்தியர், முருகபெருமானிடம் பிரணவத்தின் பொருள் கேட்க, பிரணவமே மலையாக காட்சியளித்தது என்றும், திருமாலும், மஹாலட்சுமியும் இக்கோவிலில் வழிபட்டதாகவும், புராணங்கள் கூறுகின்றன.இக்கோவில், கந்தசுவாமி கோவில் நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. இந்த மலைக்கோவிலில், தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜையுடன், மாதத்தில் இரண்டு முறை பிரதோஷ வழிபாடும் நடத்தப்படுகிறது.சிறப்பு மிக்க இக்கோவிலில், கடந்த 2010ம் ஆண்டு, இவ்வூர் உபயதாரர் வாயிலாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.கோவில் கும்பாபிஷேகம், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டியது ஆகம விதியாகும். அந்த வகையில், இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த, பக்தர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, ஹிந்து அறநிலையத் துறை சார்பில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. தற்போது, கோவில் நிர்வாகம் சார்பில், அதற்கான மதிப்பீடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.