வடகிழக்கு பருவ மழை பயிர் பாதுகாப்பு விவசாயிகளுக்கு ஆலோசனை
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டு தாலுகாக்களில், 1.67 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் சம்பா பருவத்தில், 36,730 ஏக்கர் விவசாய நிலங்களில், நெல் பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிர் பாதிப்பு தற்போது, 4,670 ஏக்கர் பயிரிடப்பட்டுள்ள நிலையில், நடவு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை காலத்தில், ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால், நடவு செய்யப்பட்ட பயிர் பாதிக்கப்படுகிறது. புயலாலும், தொடர்ந்து அதிக மழையாலும் போதிய தரைமட்ட வடிகால் இல்லாத சூழ்நிலையில், வயலில் மழை அல்லது வெள்ள நீர் அளவுக்கு அதிகமாக பல நாட்கள் தேங்கி நின்று, நெல் பயிர் பாதிக்கப்படுகிறது. தற்போது, வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ளதால், பல்வேறு நிலையிலுள்ள சம்பா பருவ நெற்பயிர்களை மழை மற்றும் வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்க, வேளாண்மைத் துறை பல்வேறு தொழில்நுட்பங்களை, விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வேளாண்துறை கூறியுள்ளதாவது: மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில், பயிர் பாதிக்கப்படுவதை தடுக்க, உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். நீரை வடித்து, வேர் பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு வெளியேற்றப்படும் அதிகப்படியான நீரை வீணாக்காமல், அவற்றை பண்ணைக் குட்டைகள் மற்றும் பள்ளமான பகுதிகளில் சேமித்து வைத்து, தேவையான நேரத்தில் மீண்டும் பயன்படுத்தலாம். இதனால், நிலத்தின் நீர்மட்டமும் உயரும். மழைநீர் வடியும் போது, நீருடன் மண்ணிலுள்ள தழைச்சத்து சுண்ணாம்பு, மக்னீசியம், போரான், கந்தகம் மற்றும் சாம்பல் சத்து கரைந்து வெளியாகி விடும். இதனால், சத்துக் கள் பற்றாக்குறை ஏற்படும். அதிக மழையால், மண்ணிலிருந்து அடித்துச் செல்லப்படும் நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் சத்துக்களை ஈடு செய்ய, பரிந்துரைக்கப்பட்டதை விட 25 சதவீதம் கூடுதல் அளவு, யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை, பயிருக்கு மேல் உரமாக இடுதல் வேண்டும். ஊட்டச்சத்து பருவ மழையால் பாதிக்கப்பட்ட இளம் பயிர்களை பாதுகாக்க, மழை நின்றவுடன் ஏக்கருக்கு 2 கிலோ யூரியா, ஒரு கிலோ ஜிங்க் சல்பேட்டை, 200 லிட்டர் நீரில் கலந்து, ஒரு இரவு முழுதும் ஊற வைத்து, கை தெளிப்பான் மூலமாக பயிரின் இலைகளில் படும்படி தெளிக்க வேண்டும். பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கான அறிகுறிகள் குறித்து கண்காணிக்க வேண்டும். பூச்சி தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் போகும் போது, வேம்பு சார்ந்த மருந்துகளை உபயோகிக்க வேண்டும். பூக்கும் தறுவாயில் உள்ள பயிர்களுக்கு வயலில் தண்ணீர் வடிந்தவுடன், ஒரு ஏக்கருக்கு மேல் உரமாக, 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து, ஒரு இரவு முழுதும் வைத்து, மறுநாள் 17 கிலோ பொட்டாஷ் உடன் வயலில் இடுவதன் மூலமாக, ஊட்டச்சத்து குறைப்பாட்டை தவிர்க்கலாம். இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மீள, சம்பா பருவத்திற்கு நெல் பயிருக்கு ஏக்கருக்கு, 545 ரூபாய் செலுத்தி, பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். அனைத்து விவசாயிகளும், இந்த காப்பீடை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பயிர் காப்பீடு செய்வதற்கு, வரும் 15ம் தேதி கடைசி. - பா.பிரேம்சாந்தி, வேளாண்மை இணை இயக்குநர், செங்கல்பட்டு.