உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நள்ளிரவில் குடிநீர் தொட்டி இடித்து அகற்றம் பல்லாவரத்தில் அ.தி.மு.க.,வினர் கண்டனம்

நள்ளிரவில் குடிநீர் தொட்டி இடித்து அகற்றம் பல்லாவரத்தில் அ.தி.மு.க.,வினர் கண்டனம்

பல்லாவரம்:தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டலம், 14வது வார்டு, சாலமன் தெருவில், 2012ல் சிறுமின் விசை நீர்த்தேக்க தொட்டி ஒன்று கட்டப்பட்டது.ஆரம்பத்தில், இந்த தொட்டியை மக்கள் பயன்படுத்தி வந்தனர். சமீபகாலமாக பயன்பாடின்றி கிடந்ததாக தெரிகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, இந்த தொட்டியை, பொக்லைன் வாயிலாக அடியோடு இடித்து உடைத்துள்ளனர்.நேற்று காலை, இதையறிந்த அப்பகுதி அ.தி.மு.க.,வினர், சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி உடைக்கப்பட்டதை கண்டித்து, 2வது மண்டல அலுவலகத்திற்கு கூட்டமாக சென்று, உதவி கமிஷனர் ஸ்வர்ணலதாவிடம் மனு அளித்தனர்.அதில், குடிநீர் தொட்டியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மீண்டும் புதிய தொட்டியை அங்கேயே அமைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது.இது குறித்து, பல்லாவரம் அ.தி.மு.க., செயலர் ஜெயபிரகாஷ் கூறியதாவது:அ.தி.மு.க., ஆட்சியின் போது, இந்த தொட்டி வைக்கப்பட்டது. சுற்றுப்புறத்தில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் இல்லாத நேரத்தில் கூட, இங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும்.அந்தளவிற்கு நீரோட்டம் கொண்டது. தொட்டியை ஒட்டி, 14வது வார்டு தி.மு.க., பெண் கவுன்சிலர் மங்கையர்கரசி வீடு கட்டி வருகிறார்.அதற்கு இடையூறாக இருப்பதால், தொட்டியை உடைத்துள்ளனர். அதே இடத்தில் மீண்டும் தொட்டி வைக்கவில்லை எனில், போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பயன்பாடில்லாத சிறுமின் விசை நீர்த்தேக்க தொட்டிகளை இடிக்க வேண்டும் என, நான்கு கவுன்சிலர்கள் கடிதம் கொடுத்தனர். அது, மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.மாநகராட்சி சார்பில், பயன்பாடில்லாத தொட்டிகளை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த தொட்டியை நள்ளிரவில் யாரோ இடித்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை