அகில இந்திய போலீசார் துப்பாக்கி சுடும் போட்டி இன்று நிறைவு
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில், கடந்த 19ம் தேதி துவங்கிய அகில இந்திய போலீசார் துப்பாக்கி சுடும் போட்டி, இன்று நிறைவடைகிறது. இதில், 30 அணிகளைச் சேர்ந்த 704 வீரர்கள் பங்கேற்றனர்.புதுடில்லியில் உள்ள அகில இந்திய காவல்துறை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், அகில இந்திய போலீசார் துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 24 ஆண்டாக நடக்கிறது.இருபாலருக்குமான இப்போட்டியில், அனைத்து மாநில போலீசார் அணி மற்றும் மத்திய ஆயுதப்படையை சேர்ந்த போலீசார் அணி சார்பில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் முதல் போலீசார் வரை பங்கேற்று, தங்கள் திறமையை நிரூபிப்பர்.தொடர்ந்து மூன்றாம் முறையாக, 25வது அகில இந்திய போலீசார் துப்பாக்கி சுடும் போட்டிகள், தமிழ்நாடு காவல் துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குமுளி ஊராட்சி, ஒத்திவாக்கம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு கமான்டோ பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்தன.வண்டலுார் அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உடற்பயிற்சியகத்தில், தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால், போட்டிகளை துவக்கி வைத்தார். 'ரைபிள், ரிவால்வர், கார்பன்' என, 13 பிரிவுகளில், இருபாலருக்குமான போட்டிகள் நடந்தன.இதில் 'ரைபிள் 3' பிரிவில், இந்தோ திபத் எல்லைக் காவல்படை தலைமை போலீஸ்காரர் முகமது ஹாசிப் ஆலம்கான் தங்கம் வென்றார். 'ரிவால்வார் 5' பிரிவில், அசாம் ரைபிள்ஸ் அணியின் போலீஸ்காரர் மட்டான் பன்ஷா தங்கம் வென்றார்.'ரிவால்வார் 2' பிரிவில், மத்திய சிறப்பு பாதுகாப்பு படை ஆய்வாளர் அமர்சிங், அசாம் ரைபிள்ஸ் போலீஸ்காரர் ஜித்தேந்திரா சிங், தமிழக காவல்துறை போலீஸ்காரர் சக்தி சிவனேஷ் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனர்.இன்று மாலை 4:00 மணிக்கு, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், கலை நிகழ்ச்சிகள் மற்றும் நிறைவு விழா நடக்கிறது. இதில் தமிழக துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கிறார்.