கோவில் இடத்தில் சாலை பேரூராட்சி மீது குற்றச்சாட்டு
திருக்கழுக்குன்றம்::திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் கோவில் இடத்தில், கோவில் நிர்வாக ஆட்சேபனையை மீறி, பேரூராட்சி நிர்வாகம் அத்துமீறி கான்கிரீட் சாலை அமைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின்கீழ் வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இதற்கு சொந்தமான இடம், செங்கல்பட்டு சாலை பகுதியில், புல எண் 460ல் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள், கோவில் இடத்தை ஆக்கிரமித்து, இந்திராநகர் என ஏற்படுத்தி, அங்கு வசிக்கின்றனர்.அண்மையில், கோவில் நிர்வாகம் இப்பகுதியை அளவிட்டு, அறநிலையத்துறை குறியீட்டுடன் எல்லை கற்கள் நட்டது. இப்பகுதியில், செங்கல்பட்டு சாலையை இணைக்கும் மண்பாதையை சாலையாக மேம்படுத்த, பொதுமக்கள் கோவில் நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். கோவில் இடத்தில் சாலை அமைக்க அனுமதிக்க இயலாது என, அவர்களிடம் நிர்வாகம் விளக்கியது. பேரூராட்சி நிர்வாகம், சாலை அமைப்பது தொடர்பாக, கோவில் நிர்வாகத்திடம், முறையான அனுமதியும் பெறவில்லை.காரைக்குடி பகுதியில், ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில் இடத்தில், தார்ச்சாலை அமைக்கப்பட்டது தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், சாலையை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திருக்கழுக்குன்றம் கோவில் நிர்வாகம், இதை சுட்டிக்காட்டி, அதன் உதவி ஆணையருக்கு கடிதமும் அனுப்பியுள்ளது.இச்சூழலில், விடுமுறை நாளான நேற்று, மண்பாதையில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்த கோவில் ஊழியர்களை மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:இந்திராநகர், புல எண் 460ல், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ளது. இங்கு சாலை அமைக்க அனுமதி கோரி, அப்பகுதி மக்கள் எங்களிடம் அனுமதி கேட்டனர். அதற்கு ஆட்சேபம் தெரிவித்து அனுமதி மறுத்துவிட்டோம். ஆனால், ஆட்சேபனையை மீறி, இப்போது சாலை அமைக்கின்றனர். பேரூராட்சி செயல் அலுவலரிடம், இதுபற்றி தெரிவித்தபோது, அவரும் செவிசாய்க்கவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.