ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் மாமல்லையில் பயிற்சி துவக்கம்
மாமல்லபுரம், ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் - 2025 போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், மாமல்லபுரத்தில் நேற்று 'சர்பிங்' பயிற்சியை துவக்கினர். 'சர்பிங்' எனப்படும் கடலில் அலைச்சறுக்கும் விளையாட்டு, நம் நாட்டில் பிரபலமடைந்து, சர்பிங் வீரர்கள் அதிகரித்து வருகின்றனர். இதையடுத்து, தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்கம், தமிழக இளைஞர் நலன், விளையாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து, நான்காம் ஆண்டு ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டியை, மாமல்லபுரத்தில் ஆக., 3ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடத்துகின்றன. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர். மேலும், தேர்வாகும் வீரர்கள், குளோபல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவர். இதில், இந்திய வீரர்களில் எட்டு பேர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். சாம்பியன்ஷிப் போட்டி துவங்கவுள்ள நிலையில் வீரர்கள் - வீராங்கனையர் நேற்று, மாமல்லபுரம் கடலில் சர்பிங் பயிற்சியை துவக்கினர். சில நாட்கள் வரை, இந்த பயிற்சி தொடரும் என தெரிவித்துள்ளனர்.