பாலுார் சாலையில் மின் விளக்கின்றி அவதி
மறைமலைநகர், பாலுார் -- வடக்குப்பட்டு மாநில நெடுஞ்சாலை, 12 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலை செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையின் இணைப்பு சாலையாக உள்ளது.ரெட்டிப்பாளையம், பாலுார், கொளத்துார், தேவனுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செங்கல்பட்டு, ஒரகடம் பகுதிகளுக்குச் சென்று வர, இந்த சாலையைப் பயன்படுத்துகின்றனர்.இந்த சாலையோரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், குடியிருப்பு பகுதிகளில் குறிப்பிட்ட துாரத்திற்கு மட்டும், மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. கிராமத்திற்கு வெளியே உள்ள பகுதிகளில் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால், அந்த பகுதி முழுதும் இருள் சூழ்ந்து, வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.சாலையில் பல இடங்களில் வளைவுகள், வேகத்தடை உள்ளிட்டவை இரவில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல், தடுமாறி வருகின்றனர். இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறுகையில், 'சுற்றியுள்ள கிராம மக்கள், இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி, பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். இருள் சூழ்ந்த இந்த சாலையில் செல்வது சவாலாக உள்ளது. எனவே, மின் விளக்குகள் இல்லாத பகுதியில் புதிதாக மின் விளக்குகள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.