புயலால் சாய்ந்த வாழை மரங்கள்
மறைமலை நகர் : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலாற்றங்கரை ஓரம் உள்ள கிராமங்களான திம்மாவரம், ஆத்துார், தென்பாதி, வடபாதி, பாலுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், 200 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.'பெஞ்சல்' புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக, பல இடங்களில் 1,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், முழுதும் முறிந்து விழுந்து உள்ளன.பாதிக்கப்பட்ட பகுதிகளில் காட்டாங்கொளத்துார் ஒன்றிய தோட்டக்கலை துறை அதிகாரிகள் பார்வையிட்டு, சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:காட்டாங்கொளத்துார் ஒன்றியம் ஆத்துார் சுற்றுவட்டாரத்தில், அதிக அளவில் வாழை பயிரிடப்படுகிறது. சில நாட்களில் சந்தைக்கு எடுத்துச் செல்லும் நிலையில் இருந்த வாழை தார்கள், புயலால் மரத்துடன் முறிந்து விழுந்துள்ளன. காப்பீடு செய்வோருக்கு முறையாக காப்பீடு தொகை கிடைக்காததால், விவசாயிகள் காப்பீடு செய்ய முன்வருவதில்லை. அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.