பாரதிதாசன் பிறந்தநாளை உலக தமிழ்நாளாக அறிவிக்கும் விழா
திருப்போரூர்,புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை, உலக தமிழ்நாள் என அறிவிக்கும் விழா, திருப்போரூர் அடுத்த மேலக்கோட்டையூர் வி.ஐ.டி., பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. தமிழியக்கம், அமெரிக்கா புரட்சி கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவை, மும்பை லெமுரியா அறக்கட்டளை, கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தின.வி.ஐ.டி., பல்கலை நிறுவனர் விசுவநாதன் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வைகைச்செல்வன் உட்பட பலர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். விழாவில், பாரதிதாசன் புகைப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பாரதிதாசன் குறித்த சிறப்புகள் திரையிடப்பட்டன. பாரதிதாசனின் பேரன் பாரதி எழுதிய,'நெருஞ்சி மலர்க்காட்டிடையே' எனும் நுால் வெளியிடப்பட்டது. விழாவில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை, உலக தமிழ்நாள் என அறிவித்து அரசு அரசாணை வெளியிட வேண்டும் என அனைவரும் வலியுறுத்தி பேசினர்.