பீஹார் வாலிபருக்கு வெட்டு தப்பி ஓடிய கும்பலுக்கு வலை
செங்கல்பட்டு, பீஹார் வாலிபரை வெட்டிவிட்டு, தப்பிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் அரவிந்த்குமார், 34. இவரது தம்பி தரம்ஜித்குமார், 19. இருவரும், செங்கல்பட்டு அடுத்த வல்லம் கிராமத்தில் தங்கி, வல்லம் ஊராட்சி மன்ற தலைவர் காந்தி என்பவரிடம், வீட்டு சுப நிகழ்ச்சிக்கு பந்தல் அமைக்கும் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், திருப்போரூர் கூட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் இருவரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு காந்தியிடம் ஏற்கனவே வேலை பார்த்த தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் வந்தனர். அங்கு அரவிந்த்குமாரிடம் 50,000 ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில், தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அரவிந்த் குமாரை கத்தியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். அங்கிருந்தோர் அரவிந்த்குமாரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இதுகுறித்து தரம்ஜித்குமார் அளித்த புகாரையடுத்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினேஷ் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.