உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  திருப்போரூரில் விழுந்த விமான கருப்பு பெட்டி மீட்பு

 திருப்போரூரில் விழுந்த விமான கருப்பு பெட்டி மீட்பு

திருப்போரூர்: திருப்போரூரில், எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி, 10 அடி ஆழ சேற்றிலிருந்து நேற்று மீட்கப்பட்டது. சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமான படையின் விமானப்படை தளத்திலிருந்து, நேற்று முன்தினம் பகல், 1:30 மணிக்கு, 'பிளேட்டஸ் பி.சி.,7' என்ற பயிற்சி விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தை விமானி சுபம், 30, என்பவர் இயக்கினார். இந்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, திருப்போரூர் -- நெம்மேலி சாலையில் உள்ள தனியார் உப்பு 'பேக்கிங்' செய்யும் தொழிற்சாலையின் பின்பகுதியில் சேற்றில் விழுந்து வெடித்தது. விமானி, 'பாராசூட்டில்' தப்பினார். இந்நிலையில், இரண்டாவது நாளான நேற்று, சேற்றில் 10 அடி ஆழத்தில் புதைந்த விமானத்தின் கருப்பு பெட்டி உட்பட மற்ற பாகங்களை தேடும் பணி நடந்தது. 'பொக்லைன்' வாயிலாக தோண்டிய போது, காலை 11:30 மணியளவில், கருப்பு பெட்டி கிடைத்தது. செங்கல்பட்டு டி.ஆர்.ஓ., கணேஷ்குமார், திருப்போரூர் தாசில்தார் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். மீட்கப்பட்ட கருப்பு பெட்டி மற்றும் சேகரிக்கப்பட்ட மற்ற பாகங்கள், தாம்பரம் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. கருப்பு பெட்டியை ஆய்வு செய்த பின், விபத்திற்கான காரணம் உள்ளிட்ட விபரங்கள் தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை