ஓதியூர் உப்பங்கழியில் பாலம் நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை
சென்னை,:'மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை, கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது. இதற்காக, சாலையின் மேற்கு பகுதியில் உள்ள ஓதியூர் உப்பங்கழி ஏரி அழிக்கப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும்' என, சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர், பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த தீர்ப்பாயம், 'கடல் நீர் இயற்கையாக வந்து செல்வதற்கு எவ்வித தடையும் ஏற்படுத்தாமல், ஓதியூர் உப்பங்கழி ஏரிக்குள் பாலம் அமைக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ள வேண்டும். ஆணையத்தின் திட்ட இயக்குனர் நேரில் ஆஜராகி, பாலம் தொடர்பான தொழில்நுட்ப விபரங்களை தெரிவிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.இந்நிலையில், தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, தீர்ப்பாயத்தில் நேரில் ஆஜரான இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் சைதன்யா, ''கடல் நீர் இயற்கையாக வந்து செல்வதற்கு எவ்வித தடையும் ஏற்படுத்தாமல், துாண்களை அமைத்து பாலம் கட்டுவது குறித்து ஆணையம் ஆய்வு செய்து வருகிறது,'' என்றார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கை, வரும் டிச., 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.