உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருக்கழுக்குன்றம் பஸ் பணிமனை திட்டம் இழுபறி

திருக்கழுக்குன்றம் பஸ் பணிமனை திட்டம் இழுபறி

திருக்கழுக்குன்றம்,கல்பாக்கம் அணுசக்தி துறையின் குறுகிய இடத்தில் செயல்படும் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை, திருக்கழுக்குன்றம் பகுதிக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும், திட்டம் கிடப்பில் போட்டதால் அதிருப்தி நிலவுகிறது.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டலத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.அவற்றை நிர்வகித்து பராமரிக்க, இந்த மாவட்டத்தில் செங்கல்பட்டு, கல்பாக்கம், மதுராந்தகம், தாம்பரம் ஆகிய பகுதிகளில், கிளை அலுவலகம் மற்றும் பணிமனைகள் இயங்குகின்றன.விழுப்புரம் கோட்டம், தந்தை பெரியார் போக்குவரத்துக் கழகமாக செயல்பட்ட போது, அன்றைய தேவையின் அடிப்படையில் பணிமனைகள் அமைக்கப்பட்டன.மற்ற பணிமனைகள் சொந்த இடத்தில் இயங்கும் நிலையில், கல்பாக்கம் பணிமனை, அணுசக்தி துறைக்குச் சொந்தமான குறுகிய இடத்தில், இடநெருக்கடியில் இயங்குகிறது. அதேபோன்று, செங்கல்பட்டில் பல ஆண்டுகளுக்கு முன், ஒரே பணிமனை இயங்கியது. 60 பேருந்துகளுக்கு ஒரு பணிமனை என, நிர்வாக வசதிக்காக, ஆறு ஆண்டுகளுக்கு முன் இரண்டாக பிரிக்கப்பட்டது. பழைய பணிமனையே, இரண்டிற்கும் பொது பணிமனையாக இயங்குகிறது. கல்பாக்கம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளின் பணிமனை இடநெருக்கடிக்கு தீர்வு காண, இரண்டு பகுதிகளின் சில வழித்தடங்களைப் பிரித்து, திருக்கழுக்குன்றத்தில் புதிய பணிமனை ஏற்படுத்த, போக்குவரத்துக் கழக நிர்வாகம் முடிவெடுத்தது.அதைத்தொடர்ந்து, பணிமனை தேவைக்காக, சில ஏக்கர் இடம் ஒதுக்க கோரி, வருவாய்த் துறையிடம் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து திருக்கழுக்குன்றம் தாலுகா நிர்வாகம் திருக்கழுக்குன்றம், ருத்திரான்கோவில் பகுதி, வீராணம் குடிநீர் குழாய் தடத்தை ஒட்டியுள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை பரிசீலித்தது.ஆனால், தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படாமல், இத்திட்டம் கிடப்பில் உள்ளது.கல்பாக்கத்தில், மாநில அரசின் பேருந்து பணிமனை செயல்படுவது, அணுசக்தி துறை செயல்பாட்டிற்கு இடையூறாக இருக்கும் எனவும், பேருந்திற்காக பிற பகுதியினர் இங்கு வரும் சூழலில், பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படும் எனவும், அத்துறை கருதுவதாக கூறப்படுகிறது.இச்சூழலில், பணிமனையிலிருந்து இயக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பேருந்துகளில், இடநெருக்கடி காரணமாக, சில ஆண்டுகளுக்கு முன், குறிப்பிட்ட எண்ணிக்கை பேருந்துகளை செங்கல்பட்டு பணிமனையில் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், கல்பாக்கத்திலிருந்து மாமல்லபுரம் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட பேருந்துகள், 10 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டன.தற்போது இங்குள்ள பேருந்துகள், கல்பாக்கம் - தாம்பரம், தாம்பரம் - திருச்சி, தாம்பரம் - கும்பகோணம் ஆகிய தடங்களில் மட்டுமே இயக்கப்படுகின்றன. பணிமனைக்கு உட்பட்ட எல்லை பகுதியில், பேருந்து தேவை அதிகரித்தும், அதற்கேற்ப பேருந்துகள் இயக்கப்படவில்லை. திருக்கழுக்குன்றம் பணிமனை அமைக்கப்பட்டால், பேருந்துகளை அதிகப்படுத்தி, நிறுத்தப்பட்ட தடங்கள் மற்றும் புதிய தடங்களில் பேருந்துகள் இயக்கலாம். எனவே, திருக்கழுக்குன்றத்தில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து பணிமனை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.திருக்கழுக்குன்றத்தில் அரசு பேருந்து பணிமனை ஏற்படுத்துவது அவசியம். இங்கிருந்து சென்னை போன்ற இடங்களுக்கு, தற்போது நேரடி பேருந்து வசதி இல்லை. தாம்பரம் வரை தான் பேருந்துகள் செல்கின்றன. இங்கேயே பணிமனை இருந்தால், பேருந்துகளை அதிகரித்து, பல தடங்களில் இயக்கலாம். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சி.ஆறுமுகம், திருக்கழுக்குன்றம்.கல்பாக்கத்தில், அணுசக்தி துறைக்குச் சொந்தமான 2 ஏக்கர் இடத்தில், மாத வாடகைக்கு பணிமனை செயல்படுகிறது. இங்கு ஐந்தாண்டுகளாக, 37 பேருந்துகளே உள்ளன. அதற்கு முன், 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இருந்திருக்கலாம். புதிய பேருந்து பணிமனையை, திருக்கழுக்குன்றத்தில் அமைக்க முடிவெடுத்தது பற்றி, தற்போதைய அலுவலர்களுக்கு தெரியாது.- போக்குவரத்துக் கழக அலுவலர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை