சிசிடிவி கேமராக்கள் வெண்பாக்கத்தில் மாயம்
மறைமலைநகர், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சியில் கொளத்துார், வெண்பாக்கம் ஆகிய இரண்டு கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்த ஊராட்சியில் கடந்த 2022ம் ஆண்டு தெள்ளிமேடு -- பாலுார் சாலையில், வெண்பாக்கம் முருகன் கோவில் அருகில் கண்காணிப்பு கேமராக்கள், ஊராட்சி சார்பில் வைக்கப்பட்டன. இதன் காட்சிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வந்தன.இந்த கேமராக்கள், பாலுார் போலீசார் குற்றவாளிகளை கண்காணிக்க வசதியாக இருந்து வந்தன. இந்நிலையில், இரும்பு கம்பத்தில் அமைக்கப்பட்டு இருந்த நான்கு கேமராக்கள் மாயமாகி உள்ளன.இதன் காரணமாக, இந்த பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிப்பதில், போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த பகுதியில் பெண்கள் காத்திருந்து ஷேர் ஆட்டோக்கள் வழியாக சிங்கபெருமாள் கோவிலுக்கு சென்று வருகின்றனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் முருகன் கோவில் உண்டியல் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது.விபத்து உள்ளிட்டவை நடக்கும் போதும் யார் மீது தவறு என அறிய, கேமரா காட்சிகள் உதவியாக இருந்தன. தற்போது கேமராக்கள் மாயமானது, சமூக விரோதிகள் மற்றும் திருடர்களுக்கு உதவக்கூடிய வகையில் உள்ளது. எனவே மீண்டும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.