செங்கையில் காசநோய் இல்லாத 44 ஊராட்சிக்கு பாராட்டு சான்று
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், காசநோய் இல்லாத 44 ஊராட்சிகளுக்கு, கலெக்டர் அருண்ராஜ் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.இதில், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, கலைஞர் கனவு இல்ல வீடு, சாலை, குடிநீர், பட்டா மாற்றம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 537 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் வாயிலாக, காசநோய் இல்லாத 44 ஊராட்சிகளுக்கு, கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.மேலும், உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் பல்வேறு பள்ளி, கல்லுாரிகளில் காசநோய் பற்றிய விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.