மேலும் செய்திகள்
வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
04-Aug-2025
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், பல்வேறு திட்டங்களில் வீடுகள் கட்டிய பயனாளிகளுக்கு, நிலுவை தொகையை வழங்க, கலெக்டர் சினேகா ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன்காக்கும் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில், நேற்று நடந்தது. சப் - கலெக்டர் மாலதி ஹெலன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் இலவச வீட்டுமனை, பட்டா, மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாற்றம், கலைஞர் கனவு இல்லம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டங்களில் வீடு ஒதுக்கீடு, மின் இணைப்பு, அரசு நேடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 385 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் சினேகா உத்தரவிட்டார். அதன் பின், பெரும்பாக்கத்தில் நடந்த சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 27 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் வழங்கினார். இதைத்தொடர்ந்து, கலெக்டர் சினேகா பிறப்பித்த உத்தரவு: கல்லுாரிகளில் படிக்கும் மாணவ - மாணவியர் கல்வி கடன் கேட்டு விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, கல்விக் கடன் வழங்க, முன்னோடி வங்கி மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலைஞர் கனவு இல்லம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டப்பட்டதற்கு, நிலுவை தொகை வழங்கப்படவில்லை என, பொதுமக்கள் மனுக்கள் அளித்துள்ளனர். இந்த மனுக்கள் மீது விசாரணை செய்து, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் உத்தரவிட்டார்.
04-Aug-2025