உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை நகராட்சி வளர்ச்சி பணிகள் டெண்டர் விட்டும் துவங்காத அவலம்

செங்கை நகராட்சி வளர்ச்சி பணிகள் டெண்டர் விட்டும் துவங்காத அவலம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், காய்கறி அங்காடியில் 62 கடைகள், பேருந்து நிலையத்தில் புதிய கட்டடம், வணிக வளாக கட்டடத்தில் 16 கடைகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும், பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. செங்கல்பட்டு நகராட்சியில், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதன் வளாகத்தில் கடைகள், பேருந்துகள் நிறுத்த இடவசதி, குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளன. ஆனால், பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணியர் அமர இருக்கைகள் போன்ற வசதிகள் இல்லை. இதனால் முதியோர், கர்ப்பிணியர், மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கட்டடங்கள் பராமரிப்பின்றி உள்ளன. அங்குள்ள கால்வாய்களும் துார்ந்து, மழைநீர் வெளியேற வழியின்றி, கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பயணியருக்கு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன்பின், தமிழக சட்டசபையில், கடந்த மார்ச் 25ம் தேதி, பேருந்து நிலையம், வணிக வளாகம் மற்றும் முதல் தளத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் உள்ளிட்டவை கட்ட 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணிகளை செயல்படுத்த நிர்வாகம் அனுமதி வழங்கி, கடந்த ஆக., 4ம் தேதி, 'டெண்டர்' விடப்பட்டது. இப்பணிகளை செய்ய தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர், இன்னும் பணிகளை துவக்கவில்லை. இதேபோல, செங்கல்பட்டு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகில், நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட வணிக வளாக கட்டடம் வலுவிழந்ததால், புதிய கட்டடம் கட்ட கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, வணிக வளாகத்தில் புதிதாக 16 கடைகள் கட்ட, 3.58 கோடி ரூபாயை, கடந்த ஆண்டு அரசு ஒதுக்கியது. இப்பணிக்கு, கடந்தாண்டு நவ., 16ம் தேதி டெண்டர் விடப்பட்டது. ஆனாலும், ஒப்பந்ததாரர் இன்னும் பணிகளை துவக்கவில்லை. மேலும், செங்கல்பட்டு உழவர் சந்தை அருகில் காய்கறி அங்காடி வளாகத்தில், 62 கடைகள் கட்ட, 2.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணிக்கும், கடந்த ஆண்டு நவ., 16ம் தேதி டெண்டர் விடப்பட்ட நிலையில், பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை. இந்த மூன்று பணிகளும் துவக்கப்படாமல் உள்ளதால், அரசு பணம் வீணடிக்கப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதற்கிடையில், நகராட்சியில் வளர்ச்சி பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்த, நகராட்சி இயக்குநர் மதுசூதனரெட்டி, மேற்கண்ட பணிகளை விரைந்து முடிக்கும்படி, நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். அப்போது, பணிகள் விரைவில் துவக்கப்படும் என, நகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. ஆனாலும், பணிகள் துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே, நகராட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல, இப்பணிகளை உடனே துவக்க, கலெக்டர் சினேகா நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். செங்கல்பட்டில் பேருந்து நிலையம், வணிக வளாகம், காய்கறி அங்காடி கட்டுமானப் பணிகள் விரைவில் துவக்கப்படும். பேருந்து நிலையத்தில் உள்ள கட்டடங்களை இடிப்பதற்கு அனுமதி கோரி உள்ளோம். அனுமதி கிடைத்த பிறகு, பணிகள் துவக்கப்படும். - பொறியாளர்கள் செங்கல்பட்டு நகராட்சி. மாவட்டத்தின் தலைநகராக உள்ள செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள் செய்ய, அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. பணிகளை செயல்படுத்துவதில், நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுகிறது. நகராட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள அனைத்து பணிகளையும் விரைந்து செயல்படுத்த, தனியாக அதிகாரியை நியமிக்க வேண்டும். - கு.வாசுதேவன், நகர வளர்ச்சி மன்ற செயலர், செங்கல்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை