உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடலோர சுற்றுலா வழித்தட திட்டம் முகையூர், பனையூரில் துறைமுகம்

கடலோர சுற்றுலா வழித்தட திட்டம் முகையூர், பனையூரில் துறைமுகம்

மாமல்லபுரம்:கடலோர சுற்றுலா உள்ளிட்ட பயன்பாட்டிற்காக, செங்கல்பட்டு மாவட்டத்தில் முகையூர், பனையூர் ஆகிய பகுதிகளில், தொழில் சார்ந்த சிறிய துறைமுகங்கள் அமைக்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இத்திட்ட செயல்பாட்டிற்காக, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தும் அறிவித்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பகுதியில், 4,000 மெகா வாட் மின் உற்பத்திக்கான,'அல்ட்ரா' அனல்மின் நிலையம் அமைக்க, 20 ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு திட்டமிட்டது.

மாசு பிரச்னை

அங்கு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் நடந்து, அதன் பின், திட்டம் செயல்படுத்தப்படவில்லை.இந்நிலையம் அமைக்கப்பட்டால், எரிபொருள் தேவைக்கான நிலக்கரியை கப்பலில் கொண்டு வந்து இறக்க, செய்யூர் அடுத்த பனையூர் பகுதியில் துறைமுகம் அமைக்கவும் திட்டமிட்டு, பின் கைவிடப்பட்டது.நிலக்கரி துகள் பரவலால், இப்பகுதி மாசடையலாம் எனக் கருதி, தனியார் முட்டுக்கட்டை காரணமாக கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து, கூவத்துார் அடுத்த முகையூர் பகுதியில், சிறிய துறைமுகம் அமைக்க கருதி, பல ஆண்டுகளுக்கு முன், அரசுத் துறையினர் ஆய்வு செய்தனர்.இத்திட்டமும் செயல்படுத்தப்படாமல் கேள்விக்குறியானது. இந்நிலையில், இரண்டு பகுதிகளிலுமே, தற்போது சிறிய துறைமுகங்கள் ஏற்படுத்த, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.மாமல்லபுரம் - மரக்காணம் இடையே, கடலோர சுற்றுலா வழித்தடமாக அறிவித்த அரசு, இத்தட பகுதியில் தனியார் பங்களிப்புடன் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாகவும், சட்டசபையில் அறிவித்தது. இச்சூழலில், கடலோர பகுதி சுற்றுலா, கப்பல் கட்டுமானம், கடல் உணவு பதப்படுத்துதல் ஆகிய தொழில்கள் மேம்பாட்டிற்காக, முகையூர், பனையூர் ஆகிய பகுதிகளில், தொழில் சார்ந்த சிறிய வர்த்தக துறைமுகங்களை, தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்த, முதலீட்டாளர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நீண்ட கால குத்தகை

மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கையின் கீழ், 30 முதல் 99 ஆண்டுகள் வரை என, நீண்ட கால குத்தகைக்கு அளிக்கவும் முடிவெடுத்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், பிற மாவட்டங்களைச் சேர்ந்த வானகிரி, சிலம்பிமங்கலம், விழுந்தமாவடி, மணப்பாடு, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளிலும், இதுபோன்ற துறைமுகம் அமைக்க அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை