உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்விளக்கு அமைக்க உத்தரவிட்ட கலெக்டர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம்

மின்விளக்கு அமைக்க உத்தரவிட்ட கலெக்டர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம்

செங்கல்பட்டு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக பகுதியில் மின் விளக்குகள் அமைக்க, கலெக்டர் உத்தரவிட்டு ஓராண்டாகியும், நெடுஞ்சாலைத் துறையினர் மின் விளக்கு அமைக்காமல் அலட்சியமாக உள்ளனர். செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில், செங்கல்பட்டு, வேதநாராயணபுரம் பகுதியில் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகங்களுக்கு, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மலையடி வேண்பாக்கம் ஐ.டி.ஐ., பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பேருந்துகள் நின்று செல்கின்றன. இங்கிருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். இதேபோல், ஊழியர்கள் பணி முடித்து, மாலை 6:00 மணியிலிருந்து இரவு 9:00 மணி வரை செல்கின்றனர். சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்லும் நிலையில், கலெக்டர் அலுவலகம் மற்றும் ஐ.டி.ஐ., பேருந்து நிறுத்தம் பகுதிகளில் மின் விளக்குகள் இல்லாததால், இருள் சூழ்ந்துள்ளது. இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண் ஊழியர்களிடம் செயின் பறிப்பு மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் போன்ற சம்பவங்களில், மர்ம நபர்கள் ஈடுபடுகின்றனர். இச்சம்பவங்களை தவிர்க்க, கலெக்டர் அலுவலகம் பகுதியில் மின் விளக்குகள் அமைக்க, கடந்தாண்டு நெடுஞ்சாலைத் துறைக்கு, அப்போதைய கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். ஆனால், இன்னும் மின் விளக்குகள் அமைக்காமல், நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, ஊழியர்கள், பொதுமக்கள் நலன் கருதி, கலெக்டர் அலுவலகம் பகுதியில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி