மேலும் செய்திகள்
ரேஷன் கடை ஊழியர் சம்பளம் ரூ.12 ஆயிரமாக உயர்வு
06-Aug-2025
வண்டலுார்:வண்டலுாரில், ரேஷன் கடை ஊழியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஊழியர் வருகையில் குழப்பம் ஏற்பட்டதால், நேற்று ரேஷன் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், பொருட்கள் வாங்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். வண்டலுார், ஓட்டேரி பகுதியில், சமூக நலக்கூடம் அருகே, 54ம் எண் கொண்ட ரேஷன் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் 1,200க்கும் மேற்பட்டோர் கார்டுதாரர்களாக உள்ளனர். இந்த கடையில் பணியாற்றிய நபர், நேற்று முன்தினம் வேறு பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய ஊழியர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், வழக்கம்போல் பழைய ஊழியர் கடையை திறப்பார் என, நேற்று காலை மக்கள், பொருட்கள் வாங்க வந்தனர். ஆனால், காலை 11:00 மணி வரையிலும் கடை திறக்கப்படவில்லை. இதனால், 100க்கும் மேற்பட்ட மக்கள், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். பொதுமக்கள் கூறியதாவது: காலை 9:00 மணியிலிருந்து பொருட்கள் வாங்க காத்திருந்தும், கடை ஊழியர் வரவில்லை. இதுகுறித்து அறிய, வட்ட வழங்கல் அதிகாரியின் 94455 88085 என்ற மொபைல் போன் எண்ணுக்கு அழைத்த போது, தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை என பதில் வந்தது. வண்டலுார் தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது, அந்த புகார் எண்ணிற்கு இரண்டு மாதமாக 'ரீசார்ஜ்' செய்யவில்லை என தெரிந்தது. கடை ஊழியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறித்து, கடையின் முகப்பில் அறிவிப்பு பலகை வைத்திருந்தால், இந்த ஏமாற்றம் ஏற்பட்டிருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
06-Aug-2025