புதிய ரேஷன் கடை கட்டடம் திறக்காததால் நுகர்வோர் அவதி
செங்கல்பட்டு:அண்ணாநகரில் கட்டப்பட்டுள்ள, ரேஷன் கடைக்கான புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, நகரவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.செங்கல்பட்டு நகராட்சி கோகுலபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடை, தனியார் கட்டடத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. இங்கு சின்ன மேலமையூர், வீரக்குடி வேளார் தெரு உள்ளிட்ட தெருக்களைச் சேர்ந்தவர்கள், ரேஷன் பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.இந்த கடையில் இட நெருக்கடி உள்ளதால், கடைக்கு வரும் நகரவாசிகள் சாலையில் நின்று வாங்கிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் மழை, வெயில் நேரங்களில் முதியவர்கள், பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இதனால், ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, கலெக்டர் மற்றும் நகராட்சி கமிஷனர் ஆகியோரிடம், நகரவாசிகள் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், லோக்சபா தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022 - 23ம் ஆண்டில், ரேஷன் கடைக்கு கட்டடம் கட்ட, 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.அதன் பின், செங்கல்பட்டு, அண்ணாநகர் பகுதியில் கட்டடம் கட்ட, நகராட்சி நிர்வாகம், 'டெண்டர்' விட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் பணிகளை துவக்கி, ஆறு மாதங்களுக்கு முன், பணிகள் நிறைவு செய்யப்பட்டன. ஆனால், புதிய ரேஷன் கடை கட்டடம் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுஉள்ளது. தற்போது இந்த கடையின் முன், வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுஉள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, ரேஷன் கடை புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.