ஊரப்பாக்கம் தலைவர் முறைகேடு கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்
ஊரப்பாக்கம்:சென்னை புறநகர் பகுதியான, காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. தி.மு.க.,வை சேர்ந்த பவானி, ஊராட்சி தலைவராக உள்ளார்.ஊராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக, பவானி மீது வார்டு கவுன்சிலர்கள் ஒன்பது பேர் புகார் எழுப்பி, உரிய ஆதாரங்களையும் வழங்கினர்.அதனால், கடந்த 2023 டிசம்பரில், செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குநர் தலைமையிலான அதிகாரிகள் உரிய விசாரணை நடத்திய பின், ஊராட்சி தலைவர் பவானி, வங்கியிலிருந்து பணம் எடுக்கும் அதிகாரத்தை, அப்போதைய கலெக்டர் ராகுல்நாத் பறித்தார்.எனினும், வார்டு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்று, புதிய வீட்டிற்கு கட்டட வரைபடம் மற்றும் மனைப்பிரிவு உள்ளிட்டவற்றிற்கு அனுமதி அளிக்க அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.இந்த விஷயத்திலும் பவானி, தன் கணவர் கார்த்திக்குடன் சேர்ந்து, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக, கவுன்சிலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, ஊராட்சி செயலர், அலுவலக பணியாளர்கள் எவரும், ஊராட்சி அலுவலகத்தில் இல்லை.இதனால், வீட்டு வரி செலுத்த மற்றும் இதர தேவைகளுக்காக, ஊராட்சி அலுவலகம் வந்த, 50க்கும் மேற்பட்டோர் திரும்பி சென்றனர்.செலவினங்களில் முறைகேடுமுறைகேடுகள் குறித்து, ஊரப்பாக்கம் ஊராட்சி கவுன்சிலர்கள் கூறியதாவது:கடந்த 2024 ஏப்., முதல் நடப்பாண்டு ஜன., 31 வரை, 10 மாதங்களில், மாநில நிதி, வீட்டு வரி, கட்டட வரைபட அனுமதி, குடிநீர் வரி என, பல விதங்களில் 3.50 கோடி ரூபாய்க்கும் அதிகம் வருமானம் வந்துள்ளது. ஆனால், இந்த வரவுகளுக்கான செலவினங்களில் பெரும் முறைகேடு நடந்துள்ளது.உதாரணமாக, குடிநீர் பராமரிப்பிற்காக மட்டும், 28 லட்சம் ரூபாய், தெரு விளக்கு பராமரிப்பு 11 லட்சம் ரூபாய், வெள்ள நிவாரணம் 7.50 லட்சம் ரூபாய் என, 24 வகை செலவினங்களில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேட்டிற்கு, அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.தவிர, பல தெருக்களில் மலைபோல் குப்பை சேர்ந்துள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. பல தெருக்களில் குடிநீர் விநியோகம் முறையாக இல்லை.எனவே, இதுவரை ஊராட்சியில் நடந்த செலவினங்களுக்கான கணக்கு விபரங்களை, நேர்மையான அதிகாரிகள் தலைமையில் தணிக்கை செய்து, நடந்துள்ள மொத்த ஊழல் விபரங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.