உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல்லுாரிக்காக கோவில் நிலம் குத்தகை அறிவிப்பில் தலையிட ஐகோர்ட் மறுப்பு

கல்லுாரிக்காக கோவில் நிலம் குத்தகை அறிவிப்பில் தலையிட ஐகோர்ட் மறுப்பு

சென்னை,மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கல்லுாரி அமைக்க, கொளத்துாரில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக பிறப்பித்த அறிவிப்பாணையில் தலையிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில், கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்க, கொளத்துாரில் உள்ள சோமநாதசாமி கோவிலுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை, 25 ஆண்டுகளுக்கு குத்தகை வழங்க, கடந்த மாதம் அறநிலையத்துறை ஆணையர் அறிவிப்பாணை பிறப்பித்தார். இதை எதிர்த்து, சோமநாதசாமி கோவில் பக்தரான டி.ஆர்.ரமேஷ் என்பவர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் கூறியதாவது:கோவில் நிலம் குத்தகை தொடர்பாக, அறநிலையத்துறை சட்டத்தில் கூறிய அம்சங்கள் பின்பற்றப்படவில்லை. வருவாய் துறை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி, அறிவிப்பாணை பிறப்பிக்கப்படவில்லை. கோவில் நிதியில் கல்லுாரிகள் துவங்குவதை எதிர்த்த வழக்கில் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி கூறியதாவது: குத்தகையின் போது, உரிய நடைமுறைகள் மற்றும் வழிமுறைகள் பின்பற்றப்படும். தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவிப்பாணை தொடர்பாக, மனுதாரரோ அல்லது பாதிக்கப்படுவதாக கூறப்படுவோரோ, தங்கள் ஆட்சேபனை மற்றும் பரிந்துரைகளை, வரும் 9 ம் தேதிக்கு முன், ஆணையரிடம் அளிக்கலாம். அதை செய்வதற்கு பதில், நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவு:கல்லுாரி துவங்கும் நல்ல நோக்கத்துக்காக, கோவில் நிலத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக, இந்த அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடைமுறை விலகல், முறைகேடுகள் எதையும் சுட்டிக்காட்ட மனுதாரர் நினைத்தால், எழுத்துப்பூர்வமாக அறநிலையத்துறை ஆணையரிடம் வழங்கலாம். தற்போதைய கட்டத்தில், அறிவிப்பாணையில் குறுக்கிட விரும்பவில்லை.எனவே, வரும் 9 ம் தேதிக்கு முன், அறநிலையத்துறை ஆணையரிடம், எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகளை வழங்க, மனுதாரருக்கு உத்தரவிடப்படுகிறது. தகுதி, அரசாணை, சட்டப்படி, அதை ஆணையர் பரிசீலித்து, தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை