சாலையில் உலா வரும் மாடுகள் கூடுவாஞ்சேரியில் அடிக்கடி விபத்து
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலை, நெல்லிக்குப்பம் பிரதான சாலை, நந்திவரம் உள்ளிட்ட நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், சாலைகளில் மாடுகள் அதிகமாக சுற்றித் திரிகின்றன.இவ்வாறு திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.குறிப்பாக, நந்திவரம் - கூடுவாஞ்சேரி, ஜி.எஸ்.டி., சாலை, நெல்லிக்குப்பம் பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக, அதிக அளவில் மாடுகள் திரிகின்றன.இவற்றால், நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகமாகி வருகின்றன. எனவே, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, மாடுகளின் உரிமையாளருக்கு கடும் அபராதம் விதிக்க, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.