சைக்கிளிங் போட்டியால் 6 வழி சாலையில் அவதி
திருப்போரூர்: திருப்போரூரில், ஆறுவழிச் சாலையில் நடந்த 'சைக்கிளிங்' போட்டியால் இடையூறு ஏற்பட்டதாக, வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்தனர். திருப்போரூர் - ஆலத்துார் இடையே, ஆறு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில், திருப்போரூர் - தண்டலம் இடையே உள்ள பகுதியில் நேற்று, சாலையை ஒருபுறம் தடுத்து, மாநில, 'சைக்கிளிங்' போட்டி நடந்தது. இதனால், எதிர் சாலையில் வாகனங்கள் மாற்றி விடப்பட்டதால், எதிரெதிரே அபாயகரமாக சென்றன. இதனால், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்தனர். விளையாட்டுப் போட்டி நடத்துவது நல்லதாக இருந்தாலும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாத வகையில், விளையாட்டு மைதானம் அல்லது அதற்கு ஏற்ற இடத்தில் நடத்த வேண்டும் என குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், இன்றும் இங்கு சைக்கிளிங் போட்டி நடத்தப்படுகிறது.