வங்க கடலில் பெஞ்சல் புயல் பலத்த காற்றுடன் கனமழை தீவிரம்
மாமல்லபுரம்:வடகிழக்கு பருவமழைக் காலம், கடந்த மாதம் துவங்கி, அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில், வங்க கடலில், சில நாட்களுக்கு முன், காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது.காற்றழுத்த தாழ்வு, நேற்று முன்தினம் பெஞ்சல் புயலாக உருவானது. இதையடுத்து, அன்றிரவு, செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்ய துவங்கி, நேற்றும் நீடித்தது.கடலில் அலைகள் சில அடிகள் உயரத்திற்கு எழும்பி, சீற்றம் அதிகரித்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. கனமழை காரணமாக, திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதி இருளர்கள், மாமல்லபுரத்தில் 65 பேர், கொக்கிலமேடு, வாயலுார் ஆகிய பகுதிகளில் தலா 35 பேர், பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.அவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. நிலவேம்பு குடிநீர் வழங்கி, காய்ச்சல் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைக்கும், ஏற்பாடு செய்யப்பட்டது.கலெக்டர் அருண்ராஜ், சப் - கலெக்டர் நாராயணசர்மா ஆகியோர், முகாம்களில் தங்கியுள்ள இருளர்களை பார்வையிட்டு, உணவு வழங்கப்பட்டதா என்பது குறித்து கேட்டறிந்தார்.காணொலி காட்சி வாயிலாக தொடர்புகொண்ட முதல்வர் ஸ்டாலின் மற்றும் உயரதிகாரிகளிடம், இருளர்களை பாதுகாப்பாக தங்க வைத்திருப்பது குறித்து, சப் - கலெக்டர் நாராயணசர்மா விளக்கினார்.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், இம்முகாம் இருளர்களுக்கு மதிய உணவு வழங்கினார். பேரிடர் மீட்பு படையினரின் செயல்முறைகளை ஆய்வு செய்தார்.மாவட்ட கண்காணிப்பாளர் ராகுல்நாத், மாமல்லபுரம், வாயலுார் பகுதிகளில், புயல் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்தினர், புல்டோசர் இயந்திரம் உள்ளிட்டவற்றுடன் தயார் நிலையில் இருந்தனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டனர்.மாமல்லபுரம் அரசு மருத்துவமனை சாலையில் விழுந்த மரம் உடனடியாக வெட்டி அகற்றப்பட்டது. மீனவ பகுதியில் உள்ள உணவக கீற்றுக்கூரை, பலத்த காற்றில் சரிந்தது.கடலோர பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று அதிகாலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், கூவத்துார் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.புதுப்பட்டினத்தில், பகிங்ஹாம் கால்வாய் கரையோர வசிப்பிட பகுதிகளில், மழைவெள்ளம் சூழாமல் தடுக்க, கால்வாய் முகத்துவார பகுதியில் மண்மேடுகளை அகற்றி, கால்வாய் வெள்ளம் கடலுக்குள் விடப்பட்டது.