தாம்பரம் மாநகரில் ரூ.40 லட்சத்தில் அமைத்த அலங்கார விளக்கு அவுட்
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில், மின் விளக்குகளை பராமரிக்கும் பணி, தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இதில், 44,498 மின் விளக்குகள், 50 கோடி ரூபாய் செலவில், சமீபத்தில் எல்.இ.டி., விளக்குகளாக மாற்றப்பட்டன. இதில், ஜி.எஸ்.டி., சாலையில், இரணியம்மன் கோவில் முதல் பல்லாவரம் மேம்பாலம் வரை உள்ள விளக்குகளில், ஏகப்பட்ட விளக்குகள் எரியவில்லை.இதனால், பல இடங்களில் இரவில் கும்மிருட்டாக காணப்படுகிறது. சமீபத்தில் திறக்கப்பட்ட பெருங்களத்துார் மேம்பாலத்தில், 80 சதவீத விளக்குகள் எரியாததால், நாள்தோறும் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குரோம்பேட்டை, பல்லாவரத்திலும் பல விளக்குகள் எரியாமல் உள்ளன.ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள மீடியன் கம்பங்களில், 40 லட்சம் ரூபாய் செலவில், அடிப்பகுதியில் இருந்து, 6 அடி உயரத்திற்கு அலங்கார மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. ஆரம்பத்தில் இந்த விளக்குகள் அனைத்தும் எரிந்தன. சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ரசித்துவிட்டு சென்றனர்.இவற்றில், 90 சதவீத விளக்குகள் தற்போது எரியவில்லை. நான்கே மாதங்களில், அலங்கார விளக்குகள் எரியாமல் போன சம்பவம், வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால், மக்கள் வரிப்பணம் தான் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்னையில் மாநகராட்சி கமிஷனர் தலையிட்டு, அலங்கார விளக்குகள் எரிய நடவடிக்கை எடுப்பதோடு, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.