அச்சிறுபாக்கத்தில் பி.டி.ஓ., இல்லாததால் வளர்ச்சி பணிகள் கடும் பாதிப்பு
அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் மொத்தம் 59 ஊராட்சிகளை உள்ளடக்கியது.அச்சிறுபாக்கம் ஒன்றியம் மாவட்டத்திலேயே பெரிய ஊராட்சி ஒன்றியம் ஆகும்.அந்த ஒன்றியத்தில், தமிழக அரசின் பிரதான திட்டமான கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், 650 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகிய முக்கிய திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.ஆனால், பயனாளிகளுக்கு முறையாக கட்டுமான பொருட்களான சிமென்ட், கம்பி விநியோகம் செய்யப்படவில்லை. மேலும், அதற்கான செலவு தொகையும் மிகவும் தாமதமாக விடுவிக்கப்படுகிறது.100 நாள் வேலை திட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களாக ஊராட்சி பகுதிகளில் சரிவர பணி வழங்கப்படாமல் உள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சி பணியிடம் காலியாக உள்ளது.பரங்கிமலை ஒன்றியத்தில் இருந்து அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு பணி மாறுதல் அளிக்கப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், கடந்த 25 நாட்களுக்கு மேலாகியும், இன்னும் பணிக்கு வராமல் விடுப்பில் உள்ளார்.வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொது மக்கள் கேட்கும் போது, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார ஊராட்சி அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விடுமுறையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.எனவே, மாவட்டத்திலேயே பெரிய ஊராட்சி ஒன்றியமாக உள்ள அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமனம் செய்து, திட்டப் பணிகள் முறையாக செயல்படுத்த கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, அப்பகுதியினரிடையே கோரிக்கை எழுந்துள்ளது.