திருக்கச்சூர் தேர் நிறுத்தம் கட்டுமான பணி மந்தமாக நடப்பதால் பக்தர்கள் அதிருப்தி
மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் கிராமத்தில், பழமையான அஞ்சனாட்சி தாயார் உடனுறை கச்சபேசுவரர் கோவில் உள்ளது.இது சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோவில். இந்த கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவம், தேரோட்டம் விமரிசையாக நடைபெறும்.கடந்த 33 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தேரோட்டம், புதிதாக தேர் செய்யப்பட்டு 2015ம் ஆண்டு முதல் மீண்டும் நடந்து வந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, திருப்பணிகள் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. இதனால், கோவிலுக்கு எதிரில் கிழக்கு மாடவீதியில் தேர் நிறுத்தப்பட்டு, இரும்பு தகடுகள் கொண்டு மூடப்பட்டு இருந்தது. மழைக்காலத்தில் தேரின் உட்புறத்தில் தண்ணீர் செல்வதால், தேர் வீணாகும் அபாயம் ஏற்பட்டது.எனவே இதை தடுக்க, கான்கிரீட் சுவர்கள் அமைக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 23 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு மே மாதம் பணிகள் துவக்கப்பட்டன.இந்த பணிகள் தொடர்ந்து மந்த நிலையில் நடைபெற்று வருகின்றன.இது குறித்து கிராமவாசிகள் கூறியதாவது:தேர் நிறுத்த கட்டப்படும் அறையின் கட்டுமான பணிகள் துவக்கத்தில் இருந்தே மந்த நிலையில் நடைபெற்று வருகின்றன.தற்போது கோவில் எதிரே காலி இடத்தில், தேர் தார்ப்பார் கொண்டு மூடி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. காற்று அடிக்கும் போது தார்ப்பாய் விலகி செல்வதால் மழை மற்றும் பனிப்பொழிவின் போது தேர் வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.எனவே, இந்த கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேர் பாதுகாப்பு அறை, மூன்று நிலைகளில் நடத்த திட்டமிடப்பட்டது. முதற்கட்ட பணிகள் நிறைவடைந்து உள்ளன.அடுத்த கட்ட கட்டுமான பணிகளுக்கு உயரத்திற்கு ஏற்ப இரும்பு சாரம் அமைத்து, பணிகள் நடைபெற உள்ளன. இரும்பு சாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், பணிகள் தொடர்ந்து மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. பணிகள்மீண்டும் துவக்கப்பட்டு விரைவில் முடிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.