கோவில் பல்நோக்கு கட்டடத்தை திறக்க பக்தர்கள் வலியுறுத்தல்
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு கிருத்திகை, சஷ்டி, விசாகம் உள்ளிட்ட விசேஷ நாட்களில், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்களின் வருகையால், கோவில் பிரசாத கடை, முடி ஏலம், உண்டியல் வருமானம், சிறப்பு பிரார்த்தனை கட்டணம் என, கோவிலுக்கு ஒரு ஆண்டுக்கு, 6 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது. தவிர தங்கம், வெள்ளி என, விலை உயர்ந்த பொருட்களும் காணிக்கையாக உண்டியலில் செலுத்தப்படுகின்றன.கோவில் கொடி மரம் அருகே, பல ஆண்டுகளாக கோவில் அலுவலகம் செயல்பட்டு வந்தது. பின், 14வது ஆதினம் சிவஞான சுவாமிகள் பயன்படுத்தி வந்த மடம், அலுவலகமாக பயன்பட்டது.நாளடைவில் அந்த கட்டடம் சேதமடைந்ததால், பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தில், தற்காலிகமாக அலுவலகம் செயல்பட்டு வந்தது.தற்போது, ஒரு கோடி மதிப்பில் கோவிலுக்கான புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டு, அதில் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.எனவே, மேற்கண்ட பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்ட பல்நோக்கும் கட்டடத்தை, பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, “பக்தர்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் வசதிகள் ஏற்படுத்தி, பின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.