முதலை பண்ணை அருகே வாகனங்களால் இடையூறு
கோவளம்: கோவளம் அருகே, வடநெம்மேலியில் உள்ள முதலை பண்ணைக்கு வருவோர், தங்களது வாகனங்களை இ.சி.ஆர்., சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துவதால், நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கோவளம் - மாமல்லபுரம் இடையே உள்ள இ.சி.ஆர்., சாலையை ஒட்டி, வடநெம்மேலியில் முதலை பண்ணை உள்ளது. இங்கு, நாட்டில் உள்ள பல்வேறு வகை முதலைகள், குளத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. விடுமுறை உள்ளிட்ட நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணியர், இவற்றை காண வடநெம்மேலிக்கு வருகின்றனர். அவ்வாறு வருவோர், இந்த இடத்தில் 'பார்க்கிங்'கில் இடம் இல்லாமல், சாலையோரம் தங்களது கார் போன்ற வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால், அந்த வழியாகச் செல்லும் மற்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, மெதுவாக செல்ல வேண்டியுள்ளது. எனவே, சாலையோரத்தை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதை, போலீசார் தடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.