செங்கை அரசு மருத்துவமனையில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளதால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். செங்கல்பட்டு நகராட்சியில் பழைய ஜி.எஸ்.டி., சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். புறநோயாளிகள் 3,000க்கும் மேற்பட்டவர்களும், உள் நோயாளிகள் 1700க்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை வளாகத்தில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: இந்த மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு இடங்களில் நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அமர அமைக்கப்பட்டுள்ள நிழற்குடை இருக்கைகளை நாய்கள் ஆக்கிரமித்து விடுகின்றன. ரத்த காயங்களுடன் வரும் நோயாளிகளை பார்க்கும் நாய்கள் அச்சுறுத்துகின்றன. எனவே நாய்களை பிடிக்க மருத்துவமனை நிர்வாகம் மற்றும் செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.